Published : 20 May 2022 01:36 PM
Last Updated : 20 May 2022 01:36 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர் - இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில், முதல் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில், அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கபட்டுள்ள இந்த அதிவேக ரயிலுக்கு, 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாக இருப்பதால், முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 400 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 75 ரயில்களை இயக்க, ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.
சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தற்போது தயாராகி வரும் புதிய வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்படவுள்ளது. இந்த பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார்,
அப்போது பேசிய அவர், "பிரதமரின் நோக்கம் இந்திய ரயில்வே துறையை உலக தரத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான். சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில் சேவையாக உருவாக்கப்படுவது பெருமையாக உள்ளது.
தமிழகத்தில் எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய ஐந்து ரயில் நிலையங்கள் மேம்படுத்தபடவுள்ளது. ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை. ரயில்வே துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று தரமான ரயில்கள், நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம்.
ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்கும்போது விபத்துக்குள்ளாகிறது. இதனைத் தடுக்க ரயில் தண்டவாளங்களை உயர்த்தவும், யானைகளை கடக்க தரைப்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக கேரளா, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 18 இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாநில மொழி கற்க வேண்டும். மொழி தெரியாமல் உள்ளதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT