Published : 20 May 2022 12:26 PM
Last Updated : 20 May 2022 12:26 PM

பாடத்திட்டத்தில் பெரியாரை நீக்கி விட்டு, ஹெட்கேவார் சேர்ப்பு: கர்நாடக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: கர்நாடகாவில் பள்ளிப் பாடத்திட்டத்தில் பெரியார், நாராயண குரு தொடர்பான குறிப்புகளை நீக்கி விட்டு, ஹெட்கேவார் பேசியதை பாடமாக வைத்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல், உண்மையான வரலாறுகளை மறைத்து, மதவெறிப் பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் எழுதிக் கொடுப்பதை, கற்பனைப் புராணங்கள், இதிகாசங்களை, வரலாறாகக் கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குருகுலக் கல்வியை நிலை நாட்டுகின்ற வகையில் புதிய பாடத்திட்டத்தைக் கற்பிக்க முனைகின்றார்கள். செத்துப்போன சமஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க 650 கோடி ரூபாய் செலவில் மூன்று பல்கலைக்கழகங்களை நிறுவி இருக்கின்றார்கள். அந்த வழியில் கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசு, தன் பங்குக்கு, கர்நாடக மாநில வரலாறைத் திரிக்க முயற்சிக்கின்றது.

ஆங்கில அரசை எதிர்த்துப் போர் புரிந்து வீர வரலாறு படைத்த திப்பு சுல்தான் குறித்த பாடங்களை, ஒன்று முதல் பத்து வரை பள்ளிப் பாடங்களில் இருந்து ஏற்கெனவே நீக்கி விட்டார்கள். அடுத்து இப்போது, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரளத்தின் நாராயண குரு ஆகியோரைப் பற்றிய குறிப்புகளை நீக்கி விட்டனர்.

மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவார் பேசியதை பாடமாக ஆக்கி இருக்கின்றார்கள். சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், முழுக்க முழுக்க மதச்சார்பு அமைப்புகளைப் பற்றி எழுதி இருக்கின்றார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வன்முறைகளைத் தூண்டி, பிஞ்சுக் குழந்தைகள் மாணவர்கள் மனங்களில் மதவெறியைப் புகுத்த முனைகின்ற கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசின் முயற்சிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இவர்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும், தந்தை பெரியார், நாராயண குரு ஆகியோரின் பெயர்களை, அவர்கள் நிகழ்த்திய சமூக சீர்திருத்த புரட்சியை, வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைத்து விட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x