Published : 20 May 2022 07:11 AM
Last Updated : 20 May 2022 07:11 AM

விடைத்தாள் திருத்துதல், கட்டிட பராமரிப்பு பணிகளால் தாமதம்: பள்ளிகளை ஜூன் இறுதியில் திறக்க திட்டம்

சென்னை: விடைத்தாள் திருத்துதல், கட்டிட பராமரிப்பு உள்ளிட்ட பணிகளால் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் 2021-22 கல்வி ஆண்டில் 1-9 வகுப்புகளுக்கான பள்ளி வேலை நாட்கள் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தன. மே 14-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்துதல், மதிப்பெண் பதிவேடு தயாரிப்பு உள்ளிட்ட அலுவல் பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் மட்டும் இன்று (மே 20) வரை பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்வுகள் மே 31-ம் தேதி முடிந்த பிறகு, விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 24-ம் தேதியும், மற்ற வகுப்புகளுக்கு ஜூன் 13-ம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

கோடை விடுப்பு குறைவு

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 1 முதல் 9-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 9 முதல் 17-ம் தேதி வரையும் நடக்க உள்ளது. இதனால் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கோடை விடுப்பு மிக குறைவாகவே இருக்கும்.

இதுதவிர, மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி வளாகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பராமரிப்பு பணிகளை முடிக்க ஜூன் 2-வது வரை அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க முடிவாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியிடப்படும். இந்த தாமதத்தை ஈடுகட்ட, ‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் வழியாக கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுப்பு காலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதேநேரம், சில தனியார் பள்ளிகளின் சங்கங்கள், ‘தேவைப்பட்டால் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளை திறந்துகொள்ளலாம். 1-9 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கக் கூடாது. திட்டமிட்டபடி ஜூன் 13-ம் தேதியே பள்ளிகளை திறக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x