Published : 19 May 2022 06:26 PM
Last Updated : 19 May 2022 06:26 PM

பேரறிவாளன் விடுதலை, ஜிஎஸ்டி தீர்ப்புகளை இணைத்துப் பார்க்க வேண்டும்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜிஎஸ்டி தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால், இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மாநில அரசுகளை நிர்ப்பந்திக்க முடியாது.

ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும்" என்று உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜிஎஸ்டி தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து அளித்த 2 தீர்ப்புகள் மாநில அரசின் உரிமைகள், சட்டமன்ற உரிமைகளை எடுத்துக் கூறியுள்ளன. இது ஒரு திருப்புமுனை. ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு முடிவை ஒன்று கூடி பரிசீலனை செய்து மாநில அரசுக்கோ, ஒன்றிய அரசுக்கோ அனுப்பக் கூடிய அமைப்பே என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனைக் கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை.

இன்று வரை ஜிஎஸ்டி. கவுன்சிலின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டே வருகிறோம். இனி மாநிலங்கள் அதனை ஏற்றுக்கொள்வது சட்டத்திற்காக அல்ல. விருப்பத்திற்காக மட்டுமே இருக்கும்.

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜிஎஸ்டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்து பார்க்க வேண்டிய கட்டாயமுள்ளது. கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது, ஜிஎஸ்டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே பிழையாக உள்ளது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x