Published : 19 May 2022 06:15 PM
Last Updated : 19 May 2022 06:15 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாதனூர் - குடியாத்தம் இடையே போடப்பட்ட தரைப்பாலம் இன்று அடித்துச்செல்லப்பட்டது. இதனால், 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தமிழக - ஆந்திர வனப்பகுதிகளிலும், பாலாற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோடை காலத்திலும் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) காலை வெயில் மந்தமாகவே காணப்பட்டது. பகல் 1 மணிக்கு மேல் வானம் இருண்டு, குளிர்ந்த காற்று வீசியது. ஆம்பூர், வடபுதுப்பட்டு, ஆலங்காயம், வாணியம்பாடி, உதயேந்திரம், ஜோலார்பேட்டை, ஏலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. 4 மணிக்கு பிறகு பெய்ய தொடங்கிய மழை 3 மணி நேரமாக கொட்டி தீர்த்தது.
இதனால் பாலாற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பெய்த கனமழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது குடியாத்தம் - மாதனூர் இடையே இருந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
வெள்ளம் வடிந்த பிறகு தரைப்பாலம் இருந்த இடத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆம்பூரில் பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்தது. இதனால் மாதனூர் - குடியாத்தம் இடையே அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் இன்று அடித்துச் செல்லப்பட்டது.
இதன் காரணமாக மாதனூர் - குடியாத்தம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்பூர், மாதனூர், உள்ளி, ஒடுகத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து குடியாத்தம் செல்லும் பொதுமக்களும், அங்கிருந்து ஆம்பூர், மாதனூர் வர முடியாமல் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால், பட்டுவாம்பட்டு, உள்ளி, காங்குப்பம், சின்னதோட்டாளம், வளத்தூர், ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் சாலை வசதியில்லாமல் அவதிப்பட்டனர்.
மேலும், ஒடுகத்தூர் பகுதிகளில் இருந்து குடியாத்தம் செல்லும் வாகனங்கள் பள்ளிகொண்டா வழியாகவும், ஆம்பூரில் இருந்து பேர்ணாம்பட்டு வழியாக வாகனங்கள் குடியாத்தம் திருப்பி விடப்பட்டன. மாதனூர் - குடியாத்தம் தரைப்பாலம் உடைந்த தகவல் அறிந்ததும், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் அங்கு திரண்டனர். கடந்த ஜனவரி மாதம் போடப்பட்ட தரைப்பாலம் 4 மாதங்களுக்குள் உடைந்ததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அந்த நேரத்தில், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்த வந்தனர். அவர்களை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, ஆட்சியரிடம் பொதுமக்கள் கூறும்போது, ''கடந்த ஆண்டு பெய்த கனமழையால் மாதனூர் - குடியாத்தம் தரைப்பாலம் சேதமடைந்தது. 90 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலம் கொண்ட பாலம் சேதமடைந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததும் மீண்டும் பாலம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2 மாதங்கள் கழித்து அதாவது, கடந்த ஜனவரி மாதம் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. இதற்காக ரூ.23 லட்சம் வரை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்காலிக பாலம் அமைத்து 4 மாதங்கள் முடிவதற்குள்ளாக இந்த சிறிய மழைக்கே பாலம் உடைந்து விட்டதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றது. எனவே, தற்காலிக பாலம் அமைத்த ஒப்பந்ததாரர், அதற்கு துணையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உடைத்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்த ஆட்சியர் அமர்குஷ்வாஹா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி, பாலத்தை விரைவில் சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (வியாழன்கிழமை) காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் வருமாறு: திருப்பத்தூர் 15.1,மி.மீ., ஆம்பூர் 28.4, மி.மீ., வடபுதுப்பட்டு 38.4.,மி.மீ., வாணியம்பாடி 27, மி.மீ., ஜோலார்பேட்டை 3 மி.மீ., ஆலங்காயம் 23 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 3 மி.மீ., என சராசரியாக 19.27 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...