Published : 19 May 2022 03:39 PM
Last Updated : 19 May 2022 03:39 PM

பேரறிவாளன் விடுதலை | “அதிமுக அரசின் மூளையில் உதித்த ஞானமல்ல” - பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு காட்டத்துடன் விளக்கம்

சென்னை: "எங்களது சட்ட ஞானம் - துணிச்சல் என்றெல்லாம் அறிக்கை விட்டுள்ள பழனிசாமிக்கு ஒன்றை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற நடவடிக்கை அதிமுக அரசின் மூளையில் உதித்த ஞானமல்ல" என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், “நீண்ட சிறைவாசத்திலிருந்து பேரறிவாளன் விடுதலை பெற அவரது தாய் அற்புதம்மாள் நடத்திய சட்டப் போராட்டமும் - அதற்குத் துணைநின்ற திமுக அரசும் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்காக, ஒட்டுமொத்தத் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் உணர்வினைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு முதலமைச்சராக இருந்தவர் இப்படிப் பேசியிருப்பது உள்ளபடியே வேதனையளிப்பதோடு, அவர் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாகவும் காட்டுகிறது.

பேரறிவாளன் விடுதலை குறித்து முதல்வர் வெளியிட்ட தனது அறிக்கையில், அதிமுக அரசினால் போடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை மிகுந்த பெருந்தன்மையுடன் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அந்த அறிக்கையில், “2014 முதல் 2021 வரை ஏழு வருடங்கள் அதன் மீது நடவடிக்கை எடுத்து ஏன் பேரறிவாளனை விடுவிக்க அதிமுக ஆட்சியால் முடியவில்லை - அல்லது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த 4 வருடத்தில் ஏன் இந்த விடுதலை பெற முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பவில்லை. ஏனென்றால், இது தமிழர்களின் உணர்வு தொடர்பான, இன்னும் சொல்லப்போனால் நீண்டகாலம் சிறையில் வாடுவோரின் மனித உரிமைகள் தொடர்புடையை பிரச்சினை என்று எங்கள் முதலமைச்சருக்கு மிக நன்றாக தெரியும்.

ஏதோ “எங்களது சட்ட ஞானம் - துணிச்சல்” என்றெல்லாம் அறிக்கை விட்டுள்ள பழனிசாமிக்கு ஒன்றை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற நடவடிக்கை அதிமுக அரசின் மூளையில் உதித்த ஞானமல்ல. அந்த ஏழு பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, அன்றைக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் சதாசிவம் அமர்வு 18.2.2014 அன்று அளித்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டுதல், அந்தத் தீர்ப்பில்தான் இந்த ஏழு பேருக்கும் தண்டனைக் காலத்தை ரத்து செய்து விடுதலை செய்யும் remission என்ற மாநில அரசின் அதிகாரம் பற்றி தெளிவாக விளக்கப்பட்டது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதன் அடிப்படையில்தான் அதிமுக ஆட்சியில் 7 பேர் விடுதலை குறித்து, தீர்ப்பு வெளிவந்த மறுநாள் 19.2.2014 அன்று முடிவு எடுக்கப்பட்டது. இப்படியொரு முடிவை அதிமுக ஆட்சி எடுத்தது 23 வருடங்கள் கழித்து. ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தபோது, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குள்ளேயே நிவாரணம் பெற்றுத் தந்தவர். நளினியின் தூக்குத் தண்டனையை 2000-ஆம் ஆண்டே ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவு பெற்றுத்தந்தவர் அவர் என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே, அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் சட்ட ஞானம் - துணிச்சல் பற்றியெல்லாம் “கொல்லைப்புறம் வழியாக” முதலமைச்சராகி, தமிழ்நாட்டின் நிர்வாகத்தைக் குட்டிச்சுவராக்கி விட்டுச் சென்ற பழனிசாமிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதன் பிறகு இப்போது எடப்பாடி பழனிச்சாமி 2018-ல் அமைச்சரவைத் தீர்மானம் போட்டுவிட்டு, 2021 வரை என்ன செய்து கொண்டிருந்தார்? “தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம். இனி முடிவு எடுக்க வேண்டியது ஆளுநர்தான்” என்றுதானே கூறிக் கொண்டிருந்தார்? அதற்கு மேல் ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டது உண்டா? அதன்பிறகு அதிமுகவும் பா.ஜ.க.வும் இணைந்துதானே தேர்தலைச் சந்தித்தார்கள். ஏன் அந்தத் தேர்தல் கூட்டணியைப் பயன்படுத்தி இந்த 7 பேரின் விடுதலையை ஆளுநரிடம் இருந்து பெற முடியவில்லை?

உண்மை என்னவென்றால், “நான் தீர்மானம் போட்டு அனுப்புகிறேன். நீங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விடுங்கள்” என்று கூட்டணியாகப் பேசி வைத்து அரங்கேற்றிய நாடகம்தான் இந்த விடுதலைக்கு இவ்வளவு தாமதம் ஆன ரகசியப் பின்னணி என்பதை மறுக்க முடியுமா?

மத்திய அரசின் சார்பில் இப்போது கூட உச்ச நீதிமன்றத்தில் கடுமையாக எதிர்த்து, “விடுதலை செய்யும் அதிகாரம் எங்களுக்குத்தான் இருக்கிறது” என்று கூறியபோது பழனிசாமி தமிழ்நாட்டில்தானே இருந்தார். இவரும், இவர்போன்று திமுகவை விமர்சிக்கும் கத்துக்குட்டிகளும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து ஓர் அறிக்கையேனும் விட்டது உண்டா? “எங்கோ ஓடி ஒளிந்து கொண்டார்கள்” என மக்கள் நினைக்கும் நிலையில்தானே உச்ச நீதிமன்றத்தில் இப்போது வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்ற நேரத்தில் இவர்களெல்லாம் இருந்தார்கள்? துணிச்சல் பற்றிப் பேசும் பழனிசாமி ஒன்றிய அரசின் இந்த வாதத்திற்குக் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

ஆனால், எங்கள் முதல்வர் நேற்றைய தினம் அறிக்கையில் கூறியவாறு, பேரறிவாளன் விடுதலைக்காக இதயசுத்தியோடு பாடுபட்டார். சட்ட வல்லுநர்களிடம் கலந்து பேசினார். தமிழ்நாடு அரசின் மூலமாக மூத்த சட்ட வழக்கறிஞர்களை வைத்து “அமைச்சரவை முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்” என்றும், “பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது” என்றும் ஆணித்தரமாக வாதிட வைத்தார்.

அமைச்சரவை முடிவு எடுத்து 7 ஆண்டு அதிமுக ஆட்சியில் கிடைக்காத விடுதலை, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் சாத்தியமாகி, சாதனையாகவும் மாறியிருக்கிறது. முதல்வர் இந்த சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலில், விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி 31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பேராறிவாளன் விடுதலையை, அதற்காகப் பாடுபட்ட திமுக அரசின் நடவடிக்கைகளைக் “கேலிக்கூத்து” என்று விமர்சிப்பது வெட்கக் கேடானது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் துளியும் பொருத்தமில்லாதது என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x