Last Updated : 19 May, 2022 02:46 PM

 

Published : 19 May 2022 02:46 PM
Last Updated : 19 May 2022 02:46 PM

கோவை | பொருநை அகழ்வாராய்ச்சி பொருட்கள் & ஓவியக் கண்காட்சி - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

கோவை: கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள, ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி மற்றும் அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ஓவியக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் தொல்லியல் துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ஓவியக் கண்காட்சி ஆகியவை கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கண்காட்சி அரங்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 19-ம் தேதி) பொதுமக்கள் பார்வைக்காக தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இக்கண்காட்சி அரங்கின் நுழைவாயில் பகுதியை ஒட்டியுள்ள முதல் அரங்கில், தமிழக அரசின் சாதனைகள், முதல்வர் தொடங்கி வைத்த திட்டப்பணிகள் குறித்து 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ஓவியக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு மொத்தம் 190 ஓவியங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியத்துக்கும் கீழே, அதற்கான விளக்கமும், அந்த ஓவியத்தை வரைந்த மாணவ, மாணவிகளின் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொல்பொருட்கள் கண்காட்சி: இதைத் தொடர்ந்துள்ள அரங்கில் வைகை நதிக்கரையில் நகர நாகரிகம் குறித்த கீழடி, ஆற்றங்கரை நாகரிகம் குறித்த பொருநை, சங்க காலத் தொழிற்கூடம் குறித்த கொடுமணல், 4,200 ஆண்டுகள் பழமையான இரும்பக் காலப் பண்பாடு குறித்த மயிலாடும்பாறை ஆகிய தலைப்புகளில், மேற்கண்ட 4 பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

அதாவது, தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சிவகளை, அரியலூர் மாவட்டத்தின் கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டத்தின் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தில் துளுக்கார்பட்டி, தருமபுரி மாவட்டத்தின் பெரும்பாலை ஆகிய 7 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழர்களின் எழுத்தறிவு, வேளாண்மை, நீர் மேலாண்மை, கட்டிடத் தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளில், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மாதிரிகள், அவற்றின் புகைப்படங்கள் மற்றும் சிவகளை அகழாய்வில் கிடைத்த பொருட்களை விளக்கும் வகையில் தொல்பொருட்கள், முதுமக்கள் தாழிகள், அகழாய்வுக் குழி மாதிரிகள், அவற்றின் புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கொற்கை அகழாய்வின் போது கிடைத்த சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், துளையுடன் கூடிய வடிகட்டும் குழாய் ஆகியவற்றின் மாதிரிகள், புகைப்படங்கள் மற்றும் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களின் மாதிரிகள், அவற்றின் புகைப்படங்களும் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

மயிலாடும்பாறை: அதேபோல், மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களான ஈட்டி முனைகள், அம்பு முனைகள், இரும்பினால் ஆன கத்திகள், கோடாரி, ஈமச்சின்னங்களி்ல வைக்கப்படும் படையல் பொருட்கள், மூன்றுக்கால் குடுவை உள்ளிட்ட பானைகள், கிண்ணங்கள், மக்கள் வாழ்விடப் பகுதியில் கிடைத்த வட்டச் சில்லுகள், பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன பொருட்கள், அவற்றின் புகைப்படங்கள் மற்றும் கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள், அவற்றின் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

புகைப்படங்கள் மற்றும் தொல் பொருட்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பாக சந்தேகங்களை அங்கிருந்த அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், வி.செந்தில்பாலாஜி, என்.கயல்விழி செல்வராஜ், மேயர் கல்பனா ஆனந்தகுமார், நீலகிரி எம்.பி ஆ.ராசா, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x