Published : 19 May 2022 03:02 PM
Last Updated : 19 May 2022 03:02 PM

அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து புதிய அரசாணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை: அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 14 டயாலிசிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "100 ஆண்டு பழமையான சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையை 200 படுக்கைகளுடன் 40 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு மருத்துவமனையாகவும், ரூ.12 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு என்ற சீமாங் கட்டிடமும் அமைக்கப்படும்.

கிண்டியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கரோனா மருத்துவமனை, 60 வயது கடந்த மூத்தோருக்கான மருத்துவமனையாக மாற்றியமைக்கப்படும். இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு மாதத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிண்டியில் அறிவிக்கப்பட்ட 230 கோடி ரூபாய் மதிப்பிலான பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டிட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் போலி மருத்துவர் சத்யசீலன் என்பவர் சிகிச்சை கொடுத்து 5 வயது குழந்தை இறந்தது தொடர்பாக, மினி கிளினிக் இருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு விமர்சித்துள்ளார். குழந்தைகளுக்கான மருத்துவ சேவை அம்மா கிளினிக்கில் இருந்ததா? ஓராண்டுக்கான பணி என்று எழுதி வாங்கிக் கொண்டு தான் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

சத்யசீலன் என்ற போலி மருத்துவர், தஞ்சையிலும், எழும்பூரிலும் மருத்துவ படிப்பை முடித்த மற்றொரு சத்யசீலன் என்ற மருத்துவரின் சான்றிதழை வைத்து, புகைப்படத்தை மட்டும் மாற்றி போலி சான்றிதழ்களை கொண்டு ஐந்து வருடங்களாக மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகள் போலி சான்றிதழ் மூலம் மருத்துவமனையை சிறப்பாக நடத்தி வந்துள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசாணை 354, மற்றும் அரசாணை 293 என 2 அரசாணைகள் உள்ளன. இந்த இரண்டு அரசாணைகளையும் சேர்த்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய அரசாணை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x