Published : 19 May 2022 02:35 PM
Last Updated : 19 May 2022 02:35 PM
சென்னை: பத்தாண்டுகளுக்கு முந்தைய கணக்குகளை கேட்பது தொடர்பாக வணிக வரித் துறையுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவையில் தொழில் துறையினரிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவையில் தொழில் துறையினருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசும்போது, "இங்கு பேசியிருக்கக்கூடிய தொழில்முனைவோர்கள் அனைவரும், அரசு செய்து கொண்டிருக்கக்கூடிய திட்டங்களை பாராட்டியும், வாழ்த்தியும் பேசி, அதே நேரத்தில் இருக்கக் கூடிய சில பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி, அதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்ற அந்த நிலையில் உங்கள் கருத்துக்களையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு முதல் முறையாக நடைபெற்றது குறித்தும் சொன்னீர்கள். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டமும் முதல் முறையாக இந்தக் கோவையில் தான் நாம் தொடங்கியிருக்கிறோம். ஏதோ பேசிவிட்டு, இத்துடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடும் என்று நாங்கள் இருக்க மாட்டோம். உங்களை அடிக்கடி இதுபோன்ற கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தி சந்திக்கக் கூடிய வாய்ப்பை நாங்கள் தொடர்ந்து பெறுவோம்.
அந்தப் பணியை நம்முடைய தொழில் துறை அமைச்சரும், சிறு, குறு தொழில் துறையை கண்காணித்துக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் அன்பரசனும் அடிக்கடி வருவார்கள், தேவைப்படுகிறபோது நானும் வருவேன், அவசியம் வருவேன், அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதையே தொடர்ந்து சொல்கிறேன், உங்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் என்னோடு நீங்கள் தொடர்பு கொள்ளலாம், இந்தத் துறையினுடைய அதிகாரிகளிடத்திலும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் எங்களைச் சந்திக்க நீங்கள் வரலாம். அதை எந்த நிலையிலும் நாங்கள் நிச்சயமாக மாறுபட மாட்டோம்.
எனவே, நீங்கள் எடுத்துச் சொன்ன அனைத்து கருத்துகளையும் படிப்படியாக, ஆனால் அதே நேரத்தில் உறுதியாக நிறைவேற்ற நாங்கள் காத்திருக்கிறோம் என்று சொல்லி, அடிக்கடி சந்திப்போம் என்று சொல்லியிருக்கிறோம். எனவே, மீண்டும் சந்திப்போம்.
இங்கே பேசிய ஒரு நண்பர், பத்தாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த கணக்குகளையெல்லாம் வணிக வரித் துறை கேட்பதாக சுட்டிக் காட்டியிருக்கிறார். இதுகுறித்து வணிக வரித் துறை அமைச்சரிடமும் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT