Last Updated : 19 May, 2022 02:25 PM

2  

Published : 19 May 2022 02:25 PM
Last Updated : 19 May 2022 02:25 PM

“கொள்கை வேறு... கூட்டணி வேறு” - காங்கிரஸின் ‘வெள்ளைத் துணி’ போராட்டத்துக்குப் பின் கே.எஸ்.அழகிரி கருத்து

கடலூர்: "பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; ஆளுநர் காலம் தாழ்த்தியதால் அவர் விடுவிக்கப்பட்டார்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி சிதம்பரத்தில் இன்று (மே.19) காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி வழி போராட்டம் நடந்தது.

சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அப்போது அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டியபடி அமைதி வழி போராட்டம் நடத்தினார். மேலும், வன்முறையை எதிர்ப்போம். கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது தீர்வாகாது என எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை குற்றவாளி இல்லை என சொல்லி விடுதலை செய்யவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தியதால்தான் நீதிமன்றம் விடுவித்து இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ராஜீவ் காந்தியோடு சேர்த்து 9 போலீசார் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜீவ் காந்திக்கும் குடும்பம் இருக்கிறது.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் மனநிலையை நான் நன்கு அறிவேன். அதுபோல அனைவருக்கும் தாய், மனைவி, குழந்தைகள் உள்ளனர், தாய், மனைவி, குழந்தை போன்ற உறவுகள் உள்ளனர். அவர்கள் மனநிலையை நாம் பார்க்க வேண்டும். சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? கன்றுக்குட்டி மீது தேரை ஏற்றியது தவறு எனக் கூறி தனது மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த பூமி இது.

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? இது நியாயமற்ற செயல். ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன் மிக முக்கிய குற்றவாளி என ஆதாரங்களை தெரிவித்ததாக அந்த விசாரணை அதிகாரி தெரிவித்திருக்கிறார். தமிழக சிறைகளில் இதுவரை 600 பேர் 700 பேர் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஏன் யாரும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொள்கை வேறு. கூட்டணி வேறு. எங்களது கொள்கைகளைப் பற்றி அவர்கள் ஏன் என்று கேட்கப்போவதில்லை. அவர்கள் கொள்கைகளைப் பற்றி நாங்கள் எதுவும் பேசுவதில்லை. யுத்தம் என ஒன்று வந்தால் பலர் இறக்கத்தான் செய்வார்கள் என சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அது அவர்களது கொள்கை. அதுபோல் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது'' என அழகிரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x