Published : 19 May 2022 11:52 AM
Last Updated : 19 May 2022 11:52 AM
சென்னை: பிறர் செய்வதை தான் செய்ததாக சொல்வது 'திராவிட மாடல்' போலும். அதிமுக சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை திமுக-வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அறிவார்ந்த சமுதாயத்தைப் படைக்க வேண்டுமென்றால், மனித வளத்தினை மேம்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முக்கிய காரணியாக விளங்குவது உயர் கல்வி தான் என்பதை நன்கு அறிந்து, கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் என அனைத்துப் படிப்புகளிலும் புதிய பாடப் பிரிவுகளைத் துவக்கி, கூடுதல் இருக்கைகளை உருவாக்கி சாதனை படைத்த அரசு அதிமுக அரசு. இந்த உண்மையை முற்றிலும் மறைத்து, திமுக-வின் ஆட்சிக் காலம் கல்லூரியின் பொற்காலம் என்று முதல்வர் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலே பேசியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில்தான் தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்கியது. பெருந்தலைவர் காமராசர் அவர்கள் கல்விக்கு வித்திட்டார் என்றால் சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்தி அதனை விரிவுபடுத்தியவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் வழி வந்த ஜெயலலிதா உயர் கல்வியை ஊக்குவித்தார். மருத்துவக் கல்வியை எடுத்துக்கொண்டால், அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் 22 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியைப் பெற்ற பெருமை அதிமுக அரசையே சாரும். மருத்துவப் படிப்பிற்கென தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டதும் எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் தான்.
பொறியியல் படிப்பை எடுத்துக்கொண்டால், அதிமுக காலத்தில்தான், நெல்லை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. பொறியியலுக்கு என்று பேரறிஞர் அண்ணா பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெருமை புரட்சித் தலைவர் எம்ஜிஆரையே சாரும். சட்டப் படிப்பை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் உள்ள 16 அரசு சட்டக் கல்லூரிகளில் திருச்சி, கோவை, தர்மபுரி, விழுப்புரம், ராமநாதபுரம், சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள எட்டு அரசு சட்டக் கல்லூரிகள் அனைத்திந்திய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இது தவிர, சென்னையில் சீர்மிகு சட்டப் பள்ளி 2002ம் ஆண்டும், திருச்சியில் தேசிய சட்டப் பள்ளி 2012ம் ஆண்டும் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்டன.
ஸ்ரீரங்கத்தில் இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது ஜெயலிதா ஆட்சிக் காலத்தில்தான். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் 100 கோடி ரூபாய் மதிப்பில் அரசுப் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் கல்லூரிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் துவக்கப்பட்டது. காலத்திற்கு தகுந்தவாறு, மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தரக்கூடிய நூற்றுக்கணக்கான பாடப் பிரிவுகளை புதிதாக அறிமுகப்படுத்திய அரசு அதிமுக அரசு.
மீன் வளத்தை மேம்படுத்துவதற்காகவும், மீன் வளம் குறித்து மாணவ, மாணவியர் அதிகம் அறிந்துகொள்ளும் வண்ணமும், அதற்கென தனியாக தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவர் ஜெயலலிதா. இசை மற்றும் நுண் கலைகளை மேம்படுத்துவதற்கென தனியாக தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தவரும் ஜெயலலிதாதான். அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாகத்தான், 2010-2011-ம் ஆண்டில் 32.9 விழுக்காடாக இருந்த மாணவர் சேர்க்கை 2019-2020-ல் 51.4 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கைப்படி 2030ம் ஆண்டு 50 விழுக்காட்டிற்கு மேல் உயர் கல்வி மாணவர் சேர்க்கை இருக்க வேண்டுமென்ற நிலையில், அதனை பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு எய்திவிட்டது என்றால், எந்த அளவுக்கு அதிமுக கல்விக்கு, உயர் கல்விக்கு முன்னேற்றம் அளித்து இருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு உயர் கல்வி மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது என்பது மிகப் பெரிய சாதனை. இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து, கருணாநிதியின் காலம் கல்லூரியின் பொற்காலம் என்றும், தற்போதைய ஆட்சிக் காலம் உயர்கல்வியின் பொற்காலம் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் முதல்வர் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலே கூறி இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. ஒரு வேளை பிறர் செய்வதை தான் செய்ததாக சொல்லிக் கொள்வது 'திராவிட மாடல்' போலும்!.
அதிமுக சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை தி.மு.க.வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது. பள்ளிக் கல்வியாக இருந்தாலும் சரி, உயர் கல்வியாக இருந்தாலும் சரி, அனைத்திலும் சாதனை படைத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT