Last Updated : 07 May, 2016 04:11 PM

 

Published : 07 May 2016 04:11 PM
Last Updated : 07 May 2016 04:11 PM

திருத்துறைப்பூண்டியில் தடம் பதிக்க முயலும் திராவிட கட்சிகள்

கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக உள்ள திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியை தங்கள் வசமாக்குவதற்காக திராவிட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்த இத்தொகுதியில் கடந்த 1962-ல் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பையா வெற்றி பெற்றார். பின்னர் 1967-ல் திமுகவைச் சேர்ந்த என்.தர்மலிங்கம் வெற்றி பெற்றார். 1971-க்குப் பிறகு தற்போது வரை இந்த தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வசம் உள்ளது.

டெல்டா மாவட்டத்தின் கடைமடைப் பகுதியாக இத்தொகுதி விளங்குவதால், வறட்சி ஏற்பட்டாலும், மழை வெள்ளம் வந்தாலும் அதிகம் பாதிக்கக் கூடிய பகுதியாக இத்தொகுதி உள்ளது.

இத்தொகுதியில் குறிப்பிடும்படியாக முத்துப்பேட்டை தர்காவும், அலையாத்தி காடு களும் இருந்தும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வேதாரண்யத்திலிருந்து உப்பு தமிழகம் மற்றும் வடமாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப் பட்டு வந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்துறைப்பூண்டியில் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கியதால் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த தொகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த இதுவரை மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காததை மக்கள் குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர்.

போதிய வேலைவாய்ப்பு இல்லா ததால் இத்தொகுதியில் உள்ள ஆண்களில் பெரும்பாலானோர் கேரளாவுக்கு கட்டிட மற்றும் தோட்ட வேலைகளுக்குச் சென்றுவிடு கின்றனர். 3 மாதத்துக்கு ஒருமுறை வந்து குடும்பத்தினரை பார்த்து செல்லும் அவர்களை, நிரந்தரமாக உள்ளூரிலேயே தங்கவைத்து, அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள் என்பதும் பொதுமக்களின் குற்றச் சாட்டாக உள்ளது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைவசம் இத்தொகுதி இருந்தாலும் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டனர் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரை குற்றம் சாட்டுகின்றனர் திராவிட கட்சியினர்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்த வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும், தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதைக் கூறியும் திமுக வேட்பாளர் ஆடலரசன் வாக்கு சேகரித்து வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் இத்தொகுதி யிலும் போட்டியிடுவதாகக் கருதி எனக்கு வாக்களியுங்கள் என்று கூறி அதிமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி வாக்கு சேகரித்து வருகிறார்.

திராவிட கட்சிகளை அகற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. மாற்றத்தை நோக்கி தமிழகம் செல்லவும், கூட்டாட்சி அமையவும் ஆதரவு கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.உலகநாதன் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து எப்படியும் கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டு திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதைப் பார்த்தால் இந்த முறை திராவிட கட்சிக்கு தொகுதி கைமாறிவிடுமோ என்ற எண்ணம் இத்தொகுதி வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x