Published : 20 May 2016 10:08 AM
Last Updated : 20 May 2016 10:08 AM
புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கிறது. இருப்பினும் அக் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தி யங்களான புதுச்சேரி, காரைக் கால், மாஹே, ஏனாமில் 30 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள் ளன.
இதில் காங்கிரஸ் கட்சி காமராஜ்நகர், லாஸ்பேட்டை, நெல்லித்தோப்பு, ஏம்பலம், ஏனாம், அரியாங்குப்பம், வில்லி யனூர், நெட்டப்பாக்கம், ராஜ் பவன், மணவெளி, திருநள்ளாறு, காலாப்பட்டு, பாகூர், ஊசுடு, உழவர்கரை ஆகிய 15 தொகுதிகளில் வென்றது. கூட்டணியான திமுக உருளையன்பேட்டை, நிரவி டி.ஆர். பட்டிணம் ஆகிய இரு தொகுதிகளை வென்றது.
புதுச்சேரியில் 16 இடங்கள் யார் வசம் இருக்கிறதோ அவர்கள் ஆட்சியமைக்கலாம். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களை வென்றதால் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கிறது.
ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் இந்திராநகர், கதிர்காமம், காரைக்கால் வடக்கு, மங்களம், மண்ணாடிப்பட்டு, நெடுங்காடு, தட்டாஞ்சாவடி, திருபுவனை ஆகிய 8 தொகுதிகளை வென்றுள்ளது.
அதிமுக உப்பளம், முத்தியால்பேட், முதலியார்பேட்டை மற்றும் காரைக்கால் தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மாஹேயில் மக்கள் நலக்கூட்டணி ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
அமைச்சர்கள் தோல்வி
முதல்வர் ரங்கசாமி தான் போட்டியிட்ட இந்திராநகர் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி அமைச்சர்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவா ஆகிய அனைவரும் தோல்வியடைந்தனர். சபாநாயகர் சபாபதி, அரசு கொறடா நேரு, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் பாலன் என ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் தோல்வியை தழுவியுள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகளால் புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே முதல்வராக பதவி வகித்த ரங்கசாமி ஓரங்கட்டப்பட்டு வைத்திலிங்கம் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். இதில் அதிருப்தியடைந்த ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் (நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்) என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி கடந்த 2011-ல் ஆட்சியைப் பிடித்தார். தற்போதைய தேர்தல் முடிவால் கடந்த 5 ஆண்டுகள் ரங்கசாமி வசம் இருந்த புதுச்சேரி மீண்டும் காங்கிரஸ் வசமாகியுள்ளது.
முதல்வர் யார்?
புதுச்சேரி முதல்வராக நமச்சிவாயத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்டயப்படிப்பு படித்துள்ள நமச்சிவாயம்(47) புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார்.
தற்போதைய முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மகளை மணந்துள்ளார். தலைவராக பொறுப்பேற்ற பிறகு கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் கடும் பணியாற்றினார். கட்சித் தலைமையில் ராகுலிடம் மிக நெருக்கமாக இருப்பதால் முதல்வராக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெற்றிச் செய்தியைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து குலாம்நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகிய இருவரும் புதுச்சேரிக்கு வர உள்ளனர். அவர்கள் தலைமையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெறலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் முதல்வர் யார் என்று இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.
வரும் 23-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறலாம் என காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மொத்த தொகுதிகள் - 30
காங்கிரஸ் கூட்டணி 17
காங்கிரஸ் - 15 (21)
திமுக - 2 (9)
என்.ஆர்.காங்கிரஸ் 8 (30)
அதிமுக - 4 (30)
சுயேச்சை 1
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT