Published : 18 May 2022 07:59 PM
Last Updated : 18 May 2022 07:59 PM
நெல்லை: திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளத்திலுள்ள வெங்கடேஸ்வரா கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜின் ரூ.1 கோடி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த கல்குவாரி விபத்து தொடர்பாக விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நாங்குநேரி ஏ.எஸ்.பி ராஜாசதுர்வேதி இந்நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனிடையே, கல்குவாரி விபத்தில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியிலுள்ள கல்குவாரியில் பாறைகள் சரிவு மற்றும் நீர் கசிவு காரணமாக மீட்பு பணிகள் 4-வது நாளாக மந்தமாக நடைபெற்றது. வெடி மருந்துகள் மூலம் பாறைகளை தகர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், நாங்குநேரி காக்கைகுளம் லாரி ஓட்டுநர் செல்வகுமார் (30), தச்சநல்லூர் ஊருடையார்புரம் லாரி ஓட்டுநர் ராஜேந்திரன்(35), இடையன்குளம் பொக்லைன் ஓட்டுநர் செல்வம் (27), ஆயர்குளம் லாரி கிளீனர் முருகன் (23),விட்டிலாபுரம் முருகன் (40), நாட்டார்குளம் விஜய் (27) ஆகியோர் சிக்கினர்.
அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், காவல் துறையினரும் கடந்த 15-ம் தேதி ஈடுபட்டனர். அதில் விட்டிலாபுரம் முருகன், நாட்டார்குளம் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். 17 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு மீட்கப்பட்ட இடையன்குளம் செல்வம், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புகுழுவைச் சேர்ந்த 30 பேர் அடைமிதிப்பான்குளம் வந்தனர். அவர்கள் இரு பிரிவாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணி தொடங்கும்போதே, மேலும் பாறைகள் இடிந்துவிழுந்தன. அவற்றை அகற்றி எஞ்சியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆயர்குளத்தை சேர்ந்த லாரி கிளீனர் முருகன் (23) சடலம் மீட்கப்பட்டது. இதனால், இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.
காக்கைகுளம் செல்வக்குமார் மற்றும் ஊருடையான் குடியிருப்பு ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பாறை இடுக்குகளில் மேலும் ஒருவரது சடலம் சிக்கியிருப்பதை மீட்பு குழுவினர் கண்டறிந்தனர். ஆனால், கனமான பாறைகளுக்கு அடியில் சடலம் சிக்கியிருப்பதால் அதை மீட்பதில் சிக்கல் நீடித்தது.
பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுவதாலும், பாறை இடுக்குகளில் நீர் கசிவு காணப்படுவதாலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் மீட்பு குழுவினரும், தீயணைப்பு படையினரும் பெரும் சவாலை சந்தித்து வருகிறார்கள். மண்ணியல் நிபுணர்கள், சுரங்கத்துறை அதிகாரிகள் குழுவினர் மீட்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. ட்ரோன் மூலம் குவாரியை முழுமையாக படம்பிடித்து வல்லுநர்களுக்கு அனுப்பி ஆலோசனைகளும் பெறப்படுகிறது.
இதனிடையே, குவாரியில் சிக்கியுள்ள 6-வது நபரை அடையாளம் காண திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கடிமான பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மேலும் ஒருவரது சடலம் மீட்பு: இந்த நிலையில், இன்று மாலையில் மேலும் ஒருவரது சடலத்தை மீட்பு குழுவினர் மீட்டனர். கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்துக்குள்ளான வெங்கடேஸ்வரா கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜின் ரூ.1 கோடி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த கல்குவாரி விபத்து தொடர்பாக விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நாங்குநேரி ஏ.எஸ்.பி ராஜாசதுர்வேதி இந்நடவடிக்கையை எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT