Published : 18 May 2022 05:24 PM
Last Updated : 18 May 2022 05:24 PM
ராமேசுவரம்: முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-வது ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இன்று (புதன்கிழமை) பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இலங்கையின் வடக்கு மாகாண சபையில் மே 18-ஆம் தேதியினை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரின் தீவிர கண்காணிப்புகளுக்கு மத்தியில் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்காலில் 13-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காலை 10.30 மணியளவில் தொடங்கியது. இந்த நினைவேந்தலில் நினைவுச் சுடரை இறுதி போரில் தனது ஒரு கையினை இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றி வைத்தார். நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நாளான மே 18 பிரகடனம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அனைத்து சமுதாயத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் உயிரிழந்த மக்களுக்குகாக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து அஞ்சலி
தலைநகர் கொழும்புவில் உள்ள காலிமுகத் திடலில் ஆண்டுதோறும் ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் அரசால் நடைபெற்று வந்த நிலையில், அங்கு கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார சிக்கலை இலங்கை எதிர்கொண்டுவரும் நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையோடு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த ஆண்டு முதல் முறையாக தமிழர்களும், சிங்களர்கள் இணைந்து தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் காலிமுகத் திடல் நினைவு ஸ்தூபி அமைத்து போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தொடர்ந்து கடலில் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-ஆம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT