Published : 18 May 2022 01:12 PM
Last Updated : 18 May 2022 01:12 PM
புதுச்சேரி: பேரரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் தமிழிசையிடம் கேட்டதற்கு, "உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எந்தக் கருத்தும் இல்லை" என்று பதிலளித்தார்.
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம், புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் ஆகியற்றின் சார்பில் ரூ.1.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புத்தாக்க மையத்தின் தொடக்க விழா முனைவர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை புத்தாக்க மையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, எம்பி செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அங்கு நடைபெற்ற அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களிடம் விளக்கங்கள் கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியது: ''குழந்தைகளுக்கு தேவையான வருங்கால விஞ்ஞானம், ஆராய்ச்சிக்கு இங்கே வழி வழி செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தோடு அப்துல் கலாம் அறிவியல் மையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட இருக்கிறது. இது வருங்காலத்தில் குழந்தைகளின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிக உதவியாக இருக்கும். இதன் மூலம், எந்த பள்ளியில் படிக்கும் எந்த குழந்தையும் எந்த ஆராய்ச்சி செய்யலாம்.
இது, புதுச்சேரி அரசும் மத்திய கலாச்சார அமைச்சகம் இணைந்து செய்யும் ஒரு புதிய முயற்சி. மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு எவ்வளவு சிறந்த முறையில் வழிகாட்ட முடியும் என்பதற்கும், மக்கள் எவ்வளவு பலம் பெறுவார்கள் என்பதற்கும் இந்த கண்காட்சியும் ஆராய்ச்சி மையமும் உதாரணம். வாழத் தகுந்த பூமியாக, முழுமையாக மறுசுழற்சிக்கு சாத்தியமுள்ள பூமியாக இது இருக்கவேண்டும் என்று அப்துல்கலாம் கூறினார்.
குப்பைகளை அகற்ற ஒரு ரோபோ கண்டுபிடித்திருக்கிறார்கள். புதுச்சேரியை, குப்பைகள் இல்லாத புதுச்சேரியாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சருடன் கலந்தாலோசனை செய்து திட்டங்களை வகுத்து குப்பைகள் இல்லாத புதுச்சேரியாக மாற்றும் வகையில் விஞ்ஞானபூர்வமாக பல நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனை இங்கு கிடைத்திருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.
கருத்து இல்லை: பேரரறிவாளன் விடுதலை பற்றி கருத்து கேட்டதற்கு, "உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எந்தக் கருத்தும் இல்லை" என்று குறிப்பிட்டு ஆளுநர் தமிழிசை புறப்பட்டார். முதல்வர் ரங்கசாமியும் இறுதி வரை மவுனமாகவே இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT