Published : 18 May 2022 12:59 PM
Last Updated : 18 May 2022 12:59 PM

“என் அம்மாவின் போராட்டம் மட்டும் அல்ல...” - விடுதலை குறித்து பேரறிவாளன் உணர்வுபூர்வப் பகிர்வு

சென்னை: "எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்" என்று விடுதலை குறித்து பேரறிவாளன் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேரறிவாளன் பேசியது:

"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

கெட்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வது; நல்லவர்கள் துன்பத்தில் இருப்பது ஆகிய இரண்டையும் இந்த உலகம் நினைத்துப் பார்க்கும். ஏன் என்றால் இது இயற்கை நீதி கிடையாது. நல்லவர்கள் வாழ வேண்டும். கெட்டவர்கள் வீழ வேண்டும் என்பதைதான் இந்தக் குறளில் வள்ளுவர் கூறுகிறார்.

31 ஆண்டு கால சிறை வாழ்க்கையில் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் உலக தமிழகர்கள் அனைவரும் என்னை ஆதரித்தார்கள். அன்பு செலுத்தினார்கள். தங்களின் வீட்டு பிள்ளையாக என்னை நினைத்தார்கள்.

இதற்கு முக்கிய காரணம் எனது அம்மா. அம்மாவின் தியாகம், போராட்டம். ஆரம்ப காலங்களில் அம்மா நிறைய அவமானங்களை சந்தித்துள்ளார். நிறைய புறக்கணிப்புகளை சந்தித்துள்ளார்கள். இதை எல்லாம் மீறிதான் 31 ஆண்டு காலம் இடைவிடாமல் போராடினார். எங்களின் பக்கம் உள்ள உண்மை எங்களுக்கு வலிமையைக் கொடுத்தது.

'தாய்' நாவலை 4 முறை வாழ்க்கையில் படித்துள்ளேன். 18 வயது, சிறைக்கு சென்ற பிறகு, தூக்கு கிடைத்த பிறகு என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்த நாவலை படித்துள்ளேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு உணர்வு அந்த நாவல் கொடுத்துள்ளது. அதன்பிறகு இந்த நாவலுடன் எனது அம்மாவை ஒப்பிடத் தொடங்கினேன். எனது குடும்பத்தின் போராட்டம் இல்லாமல் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது.

இது என் அம்மா, எனது குடும்பத்தின் போராட்டம் மட்டும் இல்லை. எல்லா கால கட்டங்களில் பலர் எங்களுக்காக உழைத்துள்ளார்கள். ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அரசின் ஆதரவு மற்றும் மக்களின் ஆதரவை உருவாக்கியது எனது தங்கை செங்கொடியின் தியாகம்தான்.

தியாகரஜன் ஐபிஎஸ், நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோரின் தீர்ப்புகள்தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. நீதிபதி கிருஷ்ண ஐயர் எனக்காக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நினைத்து கூட பார்க்க முடியாத வழக்கறிஞர்களை எல்லாம் எனக்காக அமர்த்தி கொடுத்துள்ளார். மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாரயாணன் 6 ஆண்டுகள் எந்த தொகை வாங்காமல் எனக்காக வாதாடியுள்ளார். தமிழக அரசு, ராகேஷ் திரிவேதி உள்ளிட்ட அரசியல் அமைப்பு சட்ட வல்லுநர்களை வைத்து வாதாடி, இந்தத் தீர்ப்பை பெற்றுத் தர காரணமாக இருந்தார்கள்.

இப்படி நன்றி சொல்ல வேண்டியவர்களின் பட்டியல் நீண்டது. வாய்ப்பு கிடைக்கும்போது அனைவருக்கும் நேரில் நன்றி சொல்வேன். இந்த நீதியமைப்பு முறையில் திறம்பட சட்டப் போராட்டத்தை நிகழ்த்தினால் நாம் எதோ ஒரு கட்டத்தில் வெற்றியடைய முடியும். ஒரு சாமானியன் இதுபோன்ற வழக்கில் உள்ளே மாட்டிக்கொண்டால், அது மிகப் பெரிய துன்பமான சட்டப் போராட்டமாக இருக்கும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு

இப்போதுதான் வெளியே வந்து உள்ளேன். இப்போதுதான் மீண்டு வந்துள்ளேன். கொஞ்சம் மூச்சு விட வேண்டும். நான் என்னை ஆசுவாசப்படுத்தி கொள்கிறேன்" என்று பேரறிவாளன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x