Published : 02 May 2016 02:18 PM
Last Updated : 02 May 2016 02:18 PM
மலைக்கிராம மக்களிடம் எதிர்ப்புகள் வலுத்து வருவதால், ஆண்டிபட்டி தொகுதியில் 5-வது முறையாக அதிமுக தொடர் வெற்றியை கைப்பற்றுமா என அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்டிபட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களை தந்த தொகுதியாக உள்ளது. 1962-ம் ஆண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 1967,1971-ம் ஆண்டுகளில் சுதந்திரா கட்சி வெற்றி பெற்றது. 1977,1980,1984-ம் ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து 3 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 1989,1996-ம் ஆண்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில் 1991-ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்றது. அதற்கு பின்னர் 2001,2002 (இடைத்தேர்தல்), 2006, 2011-ம் ஆண்டுகளில் தொடர்ந்து நான்கு முறை அதிமுக வெற்றி பெற்று இத்தொகுதியை அதிமுக கோட்டையாக மாற்றி தக்க வைத்துக்கொண்டது. 1984-ம் ஆண்டில் இந்த தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட்டபோது உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். அதனால் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவரால் வரமுடியவில்லை, இந்த நிலையில் 32,482 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஒரு வேட்பாளர் தனது தொகுதியில் பிரச்சாரம் செய்யாமலும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்காளர்களை சந்திக்காமலும் வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும். இது தமிழக தேர்தல் வரலாற்றில் சரித்திரம் என கூறப்படுகிறது. ஆண்டிபட்டி தொகுதி மக்களின் மீது இருந்த நம்பிக்கையால் ஜெயலலிதா கடந்த 2001,2006-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதற்கு காரணம் மலைக்கிராமத்தில் உள்ள அதிமுக ஓட்டு வங்கி ஆகும்.
1962-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை, 13 பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் காங்கிரஸ் 1 முறையும், சுதந்திரா கட்சி மற்றும் திமுக தலா 2 முறையும், அதிமுக 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது 14வது பேரவைத் தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, நாம் தமிழர், அகில இந்திய பார்வர்டு பிளாக், தென்இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் மலைக்கிராமத்தில் மின்சாரம், சாலை என எந்த அடிப்படை வசதிகளும் இல்லையென கூறி அரசரடி, வெள்ளிமலை, பொம்மராஜபுரம், இந்திராநகர், நொச்சிஓடை ஆகிய 5 மலைக்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பதாகக் கூறி வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்து தங்களது எதிர்ப்பினை காட்டினர். மேலும் வாக்கு கேட்டு எந்த அரசியல் கட்சியினரும் ஊருக்குள் வரக்கூடாது என்று கூறியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக இதே கோரிக்கையை வலியுறுத்தி குழிக்காடு, ராஜீவ்நகர் ஆகிய மலைக் கிராம மக்களும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முறை கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுவிற்கு பல ஆண்டுகளாக ஆதரவு தந்து வரும் மலைக் கிராம மக்களிடையே எதிர்ப்புகள் வலுத்து வருவதால், ஐந்தாவது முறையாக அதிமுக வெற்றிபெறுமா என அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT