Published : 18 May 2022 03:07 AM
Last Updated : 18 May 2022 03:07 AM
மதுரை: மதுரை நிர்வாகிகளின் அரசியல் நடவடிக்கைகள் எப்போதுமே திமுக தலைமைக்கு நெருக்கடியையும் தலைவலியையும் உண்டாக்கும். இந்த வரிசையில் தற்போது மதுரை மாநகராட்சி திமுக மேயர் இந்திராணியும் சேர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த மு.க.அழகிரி, அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டார். அதன்பிறகு மு.க.அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கவே தற்போது மதுரை மாவட்டத்தில் முழுமையாக கட்சி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. ஆனாலும், தற்போது வரை ஸ்டாலினால் மதுரையில் கட்சியை சீரமைக்க முடியவில்லை.
கிளை செயலாளர்கள் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை வெவ்வேறு கோஷ்டிகளாக செயல்படுவதால் அவர்களை கொண்டு ஒருங்கிணைந்து கட்சியை வளர்க்க முடியவில்லை. அதனாலேயே, கடந்த சட்டசபை தேர்தலில் கூட மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பாதிக்கு பாதி அதாவது, 5 தொகுதிகளை மட்டுமே திமுகவால் கைப்பற்ற முடிந்தது. தற்போது அதிமுகவுடன் ஒப்பிடும்போது கட்சி கட்டமைப்பில் திமுக மதுரையில் பலவீனமாகவே இருக்கிறது என்று பொதுவான கருத்து நிலவுகிறது.
இந்த சூழலில் மதுரை மாநகராட்சி மேயரை சுற்றி நடக்கும் சர்ச்சைகள் தற்போது திமுகவுக்கு மீண்டும் அரசியல் நெருக்கடி ஏற்படுத்தியிருக்கிறது. மேயரை நிழல் தொடரும் பெண் உதவியாளர் அரச்சனா கூறுவதைதான் அவர் கேட்பதாகவும், அவரை தாண்டி மேயரை யாரும் நெருங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வரை நீடிக்கிறது. மாநகராட்சி கோப்புகளில் கூட அந்த பெண் சரிபார்த்தப்பிறகுதான் மேயர் கையெழுத்து போடுகிறார் என நேற்று முன்தினம் மேயரை பார்த்து மனு கொடுக்க வந்து பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டினார்.
மேயரை யாரும் நெருங்க முடியாததால் தனியார் பொது விழாக்களில் தற்போது விழா ஏற்பாட்டாளர்கள் துணை மேயரை விரும்பி அழைக்கிறார்கள். அதனால், சத்தமில்லாமல் துணை மேயர் நாகராஜன் தன்னுடைய சுறுசுறுப்பான நடவடிக்கையால் மாநகராட்சி நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறார். ஆனாலும், மேயர் தரப்பினர் தற்போது வரை உஷாராகாமல் உள்ளது கிடைத்த மிகப்பெரிய அரசியல் அங்கீகாரத்தை மேயர் இந்திராணி சரியாக பயன்படுத்தவில்லையோ? என்று திமுக கட்சியினரே ஆதங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகளில் அதிமுக கவுன்சிலர்களுக்கு இருக்கை ஒதுக்குவதில் இதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அப்படியிருக்க மதுரையில் மட்டும் இந்த இருக்கைப் பிரச்சனை மேயருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாநகராட்சி கூட்டத்தில் பேசிய மேயர், அடுத்த மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதியளித்ததோடு அதிமுக மூத்த கவுன்சிலர்கள் சிலர் பெயரை குறிப்பிட்டு அவர்களிடம் வருத்தமும் தெரிவித்தார்.
அதனால், இருக்கை பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவே நினைத்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று மேயர் இந்திராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில், ‘‘நடைமுறைகளை ஆய்வு செய்து மதுரை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு விதிமுறைகள் 3 மாத காலத்திற்குள் ஏற்படுத்தப்படும், ’’ என்று கூறினார். அதனால், இன்று நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வழக்கம்போலே முறையற்ற இருக்கை வசதியிலே இருக்க வாய்ப்புள்ளது.
மேலும், அவர் அந்த அறிக்கையில், ‘‘மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அராஜகமான முறையில் நடந்து கொண்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கும் தொனியில் கூறியிருப்பது அதிமுக கவுன்சிலர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. அதனால், அவர்கள் இன்று நடக்கும் கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. அதை மேயர் எவ்வாறு கையாளப்போகிறார் என்பது தெரியவில்லை.
மாநகராட்சியில் நிதி நெருக்கடி, குடிநீர் பற்றாக்குறை, வரி வசூல், சாலை வசதியின்மை, பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதைவிட்டு மேயர், இருக்கை பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்வது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேயர் தேர்வில் ஏற்கனவே அதிருப்தியான திமுக கவுன்சிலர்கள் தற்போது மேயருக்கு சாதகமாக இல்லை. அதனால், அவர்கள் அதிமுக கவுன்சிலர்களால் மேயருக்கு ஏற்படும் நெருக்கடிகளை ரசிக்கிறார்கள்.
தற்போது அவர்கள் அதிருப்தியில் உள்ள அதிமுக கவுன்சிலர்களுடன் திரைமறைவில் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கு மேயரே வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், மேயரின் அன்றாட நிர்வாக மற்றும் அரசியல் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவருக்கு பின்னால் இருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துகிறார்களோ? என்று எண்ண தோன்றுவதாகவும் மதுரை மாநகர திமுக மூத்த நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT