Published : 17 May 2022 03:54 PM
Last Updated : 17 May 2022 03:54 PM

'ஆர்ஆர்ஆர்' திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாரப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என "ஆர்ஆர்ஆர்" என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில் உணர்வுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது, அதனை கடந்த 12 ஆம் தேதி காணொலி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்றைய தினம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "ஒரு சாதாரண இடத்தை அற்புதமான பூங்காவாக மாற்றியுள்ளனர். சாதாரண பூங்காவாக இல்லாமல் உணர்வு பூங்காவாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்காவை அமைத்துள்ளனர்.

இந்த பூங்காவை எனது பேரக்குழந்தைகள் பார்த்துவிட்டு நான் சென்று பார்வையிட வேண்டும் எனப் பரிந்துரைத்தனர். இந்த பூங்கா அற்புதமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பூங்கா 2.23 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆட்சிக்கு வந்து ஓராண்டில் பாதி நாள் கரோனா, வெள்ளம் என இதிலே சென்றுவிட்டதால் தற்போது அத்தியாவசியப் பணிகளில் கவனம் செலுத்தபட்டு வருகிறது. திமுக ஓராண்டு ஆட்சியை, அதிமுக புகழவா செய்வார்கள், எதிர்க்கட்சி என்பதால் விமர்சனம் தான் செய்வார்கள்.

எல்லா ஏரிகளையும் தூர் வாருவதற்கு என "ஆர்ஆர்ஆர்" என்று ஒரு திட்டம் உள்ளது. அதனை செயல்படுத்த உள்ளோம். 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் ஜல் சக்தி துறையின் சார்பில் ஏரிகளை தூர்வார Repair, Renovation & Restoration (RRR) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத்தான் அமைச்சர் "ஆர்ஆர்ஆர்" திட்டம் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x