Published : 17 May 2022 03:49 PM
Last Updated : 17 May 2022 03:49 PM
சென்னை: வரும் 26-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ' அதி விரைவு சக்தி' (GATI Sakthi) திட்டத்தின் கீழ் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமரின் ' அதி விரைவு சக்தி' (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 159 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வருகிற 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
பன்முனை சரக்கு பூங்கா எதற்கு? பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் சரக்கு போக்கவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. வரும் 10 ஆண்டுகளில் இது மேலும் இரு மடங்காக உயரக்கூடிய நிலையில் நம் போக்கவரத்து கட்டமைப்புகளை சீரமைப்பது அவசியமானது மட்டுமல்ல, அவசரமும் கூட.
இந்தியாவில் சரக்குப் போக்குவரத்து செலவு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 13 சதவீதமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மற்ற முக்கிய நாடுகளில் இது 8 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை சரக்குப் போக்குவரத்திற்காக செலவழிக்கின்றனர். இதன் காரணமாக நம் நாட்டின் தயாரிப்புகள் மற்ற நாடுகளின் தயாரிப்புகளை விட விலை அதிகமாக உள்ளதால், இந்திய ஏற்றுமதியின் போட்டித்தன்மை வெகுவாக பாதிக்கப்படுவதோடு, வேளாண் துறையிலும் நமது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ரயில் மூலம் சரக்குகளை கொண்டு சென்றால், செலவும் குறைவதோடு, நேரமும் சேமிக்கப்படும் என்ற போதிலும் உரிய கட்டமைப்புகள் இல்லாததால், 60 சதவீத பொருட்கள் சாலை மார்க்கமாகவே நமது நாட்டில் கொண்டு செல்லப்படுகின்றன. பொருட்களை கொண்டு செல்ல தேவைப்படும் அளவிற்கு சாலைகளுக்கேற்ற வாகனங்களும், வாகனங்களுக்கேற்ற சாலைகளும் முறையாக இல்லை என்பதால் தாமதம் ஏற்படுவதோடு பல சிக்கல்களை உருவாக்குகிறது. மேலும் இந்த பொருட்களை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் ஆகிய கட்டமைப்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை சமாளிக்கவே, ' அதி விரைவு சக்தி' (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதில் ஒரு பகுதியாகவே, 35 பன்முனை சரக்கு பூங்காக்களை நாடு முழுக்க அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம். இதன் மூலம் சென்னையில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையம் ஆகியவற்றை ரயில் மற்றும் சாலை போக்குவரத்தோடு இணைக்கும் முனையமாக மெப்பேடு பூங்கா செயல்படும். இதன் மூலம் தமிழகத்தில் சரக்குப் போக்குவரத்து தொய்வின்றி, விரைவாக, குறித்த நேரத்தில் சென்றடைவதோடு, எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவை குறைக்கும். சென்னையில் வாகனங்களால் ஏற்படும் மாசு குறையும்.
சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் அமைகின்ற இந்த பூங்காவானது பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். அந்த பகுதியே இனி சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய நிலையில், பல்வேறு சிறு குறு வர்த்தகம் வளரும்.
தமிழக தொழில்துறை மற்றும் தமிழக வர்த்தகம் மேம்படுவதோடு, தமிழக உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் இந்த ' அதி விரைவு சக்தி' தேசிய பெருந்திட்டத்தின் மூலம் அதிக பயனடைவது உறுதி செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT