Published : 17 May 2022 09:46 AM
Last Updated : 17 May 2022 09:46 AM
முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் தற்போது டெல்லியில் இருப்பதாகத் தெரிகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "எத்தனை முறை என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் நிச்சயமாக சாதனை எண்ணிக்கைதான்" என்று பதிவிட்டுள்ளார்.
I have lost count, how many times has it been? Must be a record.
— Karti P Chidambaram (@KartiPC) May 17, 2022
புதிய வழக்கு: ஏற்கெனவே ஏர்செல் மேசிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகளில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பலமுறை சோதனை நடத்திய நிலையில் தற்போது வெளிநாட்டவர் சிலருக்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத்தந்ததாக வழக்கு தொடரப்பட்டு சோதனை நடந்துவருகிறது. அதுவும் குறிப்பாக 250 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாகவும். அதற்காக ரூ.50 லட்சம் வரை கார்த்தி சிதம்பரம் கையூட்டு பெற்றதாகவும் சிபிஐ குற்றஞ்சாட்டுகிறது. பஞ்சாபில் நடைபெறும் மின் திட்டம் ஒன்றில் பணியாற்றும் பொருட்டு அந்த 250 பேருக்கும் விசா பெற்றுக் கொடுத்ததாகத் தெரிகிறது.
ஏர்செல் மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகள்.. 2006-ல் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் அனுமதியைப் பெறாமல், விதிமுறைகளை மீறி அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதனையொட்டி சிபிஐ, அமலாக்கப் பிரிவு பல முறை சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தியிருக்கிறது.
அதேபோல், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட 9 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இதுபோன்று ஏற்கெனவே பல நேரங்களில் சோதனை நடந்துள்ளதால் கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் கிண்டல் ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT