Last Updated : 17 May, 2022 07:48 AM

 

Published : 17 May 2022 07:48 AM
Last Updated : 17 May 2022 07:48 AM

திருப்பூரில் பருத்தி நூல் விலை உயர்வால் உள்நாட்டு சந்தையை மெல்ல ஆக்கிரமிக்கும் செயற்கை நூலிழை

திருப்பூர்: பருத்தி நூல் விலை உயர்வால் பின்னலாடைத் துறை தடுமாறிவரும் நிலையில், பெரு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் செயற்கை நூலிழை துணி, திருப்பூரின் உள்நாட்டு சந்தையை ஆக்கிரமித்து வருவதாகவும், தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆடை தயாரிப்பு சந்தையில் சர்வதேச கவனம் பெற்ற திருப்பூர் பின்னலாடைத் துறையில், ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்றுவந்த நிலையில், வரலாறு காணாத நூல் விலை உயர்வு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பின்னலாடை உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தப்படும் பருத்திநூல் கிலோ ரூ.200-ல் இருந்து தற்போது ரூ.480 வரை விலை உயர்ந்துள்ளது. விலை தொடர்ந்துஅதிகரிப்பதால், சர்வதேச சந்தையில் போட்டியிட்டு ஆர்டர்களை எடுக்க முடியாத நிலையில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

நூல் விலை உயர்வுக்கு மத்தியஅரசு உரிய தீர்வு காண வலியுறுத்தி திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி சார்ந்த அனைத்துத் துறையினரும் முழு உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சூழலில், வட மாநிலங்களில் சில பெருநிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் செயற்கை நூலிழை துணி திருப்பூர் சந்தையை மெல்ல ஆக்கிரமித்து வருவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் (டீமா) எம்.பி.முத்துரத்தினம் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

நூல் விலை உயர்வு காரணமாக, தற்போது 40 சதவீதம் துறைதான் உற்பத்தி செயல்பாட்டில் உள்ளது. ஒரு பருத்தி நூல் பின்னலாடை வாங்கும் விலைக்கு 3 செயற்கை நூலிழை ஆடை வாங்கிவிடலாம் என்பதால், அதற்கான ஆர்டர்களை உள்நாட்டு வியாபாரிகள் திருப்பூரில் உள்ள உற்பத்தியாளர்களிடம் கோரத் தொடங்கி விட்டனர்.

திருப்பூரில் செயற்கை நூலிழைஆயத்த துணி விற்பனைக்கு என ஒரு சந்தையே தொடங்கப்பட்டு விட்டது. இந்த துணிகள் அனைத்தும் இந்தியாவில் குறிப்பிட்டசில பெரு நிறுவனங்களால் உற்பத்திசெய்யப்படுபவை. சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 7 மெகா ஜவுளிப் பூங்கா திட்டம் என்பது செயற்கை நூலிழை உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே உள்ளது.

இந்நிலை தொடர்ந்தால், ஏழைகளின் ஆடையாக இருந்த பருத்தி, வசதி படைத்தவர்களுக்கானதாக மாறிவிடும். திருப்பூரில் 20 சதவீதம் சந்தையை செயற்கை நூலிழை துணிகள் தற்போது பிடித்துவிட்டன. இதன்மூலம் திருப்பூர் மட்டுமல்லாது, பருத்தி நூல்சார்ந்து தமிழகத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள அனைத்து தொழிற்சாலைகளும் பாதிப்பை சந்திக்கும்.

பருத்தி தமிழகத்தின் சொத்து.இதன் விலையை சில நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதால் தமிழகம் சந்திக்கும் விளைவுகளை மாநில அரசு புரிந்து கொண்டு, தமிழக பருத்தி நூல் உற்பத்தி துறையைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x