Published : 16 May 2022 03:07 PM
Last Updated : 16 May 2022 03:07 PM
சென்னை: ரூ.5800 கோடியில் மீண்டும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (மே 16) கையெழுத்தானது.
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு தடை விதித்தது.
இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு 30 மாதத்திற்குள் பணிகள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் கையெழுத்தானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.5855 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT