Published : 16 May 2022 02:31 PM
Last Updated : 16 May 2022 02:31 PM
பெரம்பலூர்: பேருந்து கட்டண உயர்வு வரும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டுள்ளனர், ஆனால், தமிழக முதல்வர் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக இதுவரை எந்த அறிவுரையும் வழங்கவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
பெரம்பலூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகின்ற சூழலில், இந்த மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து இயக்கப்படுகின்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது சட்டரீதியான விதிமுறை.
இதன் அடிப்படையில், கேரளா, ஆந்திரா போன்ற தொலைதூர மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டண நிர்ணயம் செய்யும்போது, அரசு அதிகாரிகள் இந்த கட்டணத்தை ஒப்பீடு செய்து ஒரு கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். இதைவைத்துக் கொண்டு கட்டண உயர்வு வரும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டுள்ளனர்.
தமிழக முதல்வர் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக இதுவரை எந்த அறிவுரையும் வழங்கவில்லை. டீசல் விலையை மத்திய அரசு ஒவ்வொரு நாளும் கடுமையாக உயர்த்தி வருவதை அனைவரும் அறிவர். இப்படியான சூழலில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் மக்களுக்கு பாதிப்பு வராத வகையில், பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் இயக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...