Published : 16 May 2022 02:00 PM
Last Updated : 16 May 2022 02:00 PM
சென்னை: " 'மறுமலர்ச்சி' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு காவல்துறை தடை விதிப்பதா? கிராமப்புற மக்களை சீண்டிப் பார்க்கக் கூடாது" என்று பாமக காட்டமாக கூறியுள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''திரைப்படங்களில் வெளிவந்த நல்ல பாடல்களை, சீர்திருத்தப் பாடல்களை, யார் மனதையும் புண்படுத்தப்படாத, யாரையும் இழிவுபடுத்தாத, சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இல்லாத பாடல்களை இசைக்கச் செய்வதால் இதுவரை எந்தத் தடையும் இருந்ததில்லை. தடை செய்யவும் இல்லை. தடை செய்யவேண்டிய அவசியமும் இல்லை.
'மறுமலர்ச்சி' பட பாடலுக்கு காவல்துறை தடை விதிப்பதா? கிராமப்புற மக்களை சீண்டிப் பார்க்கக் கூடாது. கிராமப்புற திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் 'மறுமலர்ச்சி' படத்தின் 'ராசு படையாட்சி' பாடலை ஒலிக்கச் செய்யக்கூடாது என்று கிராமப்புற மக்களுக்கு காவல்துறையினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். காவல்துறையினரின் இந்த அத்துமீறிய செயல் கண்டிக்கத்தக்கது.
'ராசு படையாட்சி' பாடலில் ஆட்சேபிக்கும் வகையில் எந்தக் கருத்துகளும் இல்லை. அது ஊர்மக்களுக்காக வாழும், ஊர்மக்களுக்கு உதவும் 'ராசு படையாட்சி' என்பவரை புகழும் பாடல். அப்பாடல் மக்களிடம் நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது. அதில் யாருக்கும் எதிராக எதுவும் இல்லை.
'ராசு படையாட்சி' பாடல் வடக்கு - மேற்கு மாவட்டங்களில் கிராமப்புற மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட பாடல் ஆகும். அதற்கு தடை விதிப்பது மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும். தணிக்கைத் துறையால் அனுமதிக்கப்பட்ட இப்பாடலை தடுக்க காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
தமிழகம் முழுவதும் போதைப் பொருள், கள்ள லாட்டரி போன்ற சமூகக் கேடுகளை தடுக்க முடியாது காவல்துறை, கிராமப்புற மக்களின் உணர்வுகளை சீண்டக்கூடாது. மக்களின் உணர்வுகளை மதித்து நடக்கும்படி காவல்துறையினருக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்!'' என்று ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT