Published : 16 May 2022 12:24 PM
Last Updated : 16 May 2022 12:24 PM

காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்துக: அன்புமணி 

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர் வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், உழவர்கள் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனர். ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவது உழவர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால், தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாதது, கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் குறித்த காலத்தில் திறந்து விடப்படாதது உள்ளிட்ட காரணங்களால் பல ஆண்டுகளில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பது சாத்தியமாகவில்லை.

இயற்கையின் கொடை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து திட்டமிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், ஒப்பீட்டளவில் காவிரி பாசன மாவட்டங்களில் அதிகபரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இன்றைய நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு சுமார் 9,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், இந்த மாத இறுதியில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும் நடப்பாண்டிலும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அடுத்த சில நாட்களில் காவிரி கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடைவதை உறுதி செய்வதில் தான் குறுவை சாகுபடியின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதற்காக கடைமடை பாசன பகுதிகள் வரை தூர்வாரப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

காவிரி ஆறு தூர்வாரப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழ்நாடு அரசு, காவிரி பாசனப் பகுதியைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,964 கி.மீ. நீள பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததுடன், அதற்காக ரூ.80 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்திருந்தது. காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. அதன்பின் மூன்று வாரங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்னும் தூர்வாரும் பணிகள் தீவிரமடையவில்லை. அனைத்துப் பகுதிகளிலும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதே வேகத்தில் சென்றால் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக பாசனக் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரி முடிக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த சில ஆண்டுகளாக பாசனக் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால், பாசனக் கால்வாய்களின் மட்டம் ஆற்றின் மட்டத்தை விட அதிகரித்து, அவற்றில் தண்ணீர் பாய்வது தடைபட்டது. அதனால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தாமதமாகவே தண்ணீர் சென்றது. இந்த முறையும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய்களை தூர் வாரும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி நீரை எதிர்பார்த்து ஒரு தரப்பு உழவர்கள் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகியுள்ள நிலையில், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே அனைத்து தரப்பு உழவர்களும் முழு வீச்சில் தயாராவார்கள். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியாக இருப்பதாலும், தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருவதாலும் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறப்பதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே, ஜூன் 12-ஆம் தேதிக்கு இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில் மேட்டூர் அணை திறப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு முன்கூட்டியே வெளியிட வேண்டும்.

அதேபோல், குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரங்கள் உள்ளிட்டவையும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை தமிழ்நாடுஅரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x