Published : 16 May 2022 11:52 AM
Last Updated : 16 May 2022 11:52 AM
சென்னை: "எனது ஆட்சிக் காலம் உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும். இதற்கு உறுதுணையாக உள்ள ஆளுநருக்கு நன்றி" என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா இன்று (மே 16) நடைபெற்றது இதில் பல்கலைக்கழக வேந்தர், ஆளுநர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கிய சிறப்பு சென்னை பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
தமிழக மக்களால் முதல்வராக ஆக்கப்பட்டுள்ள நான் அனைத்து மாணவர்களையும் முதல்வனாக ஆக்க உருவாக்கிய திட்டம் தான் 'நான் முதல்வன்' திட்டம்.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான பல வழிகாட்டுதல்களை வழங்க 'நான் முதல்வன்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் கூறக்கூடாது. வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று எந்த நிறுவனமும் கூறக்கூடாது. இதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து பல்கலைக்கழங்களும் இது போன்ற திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
நிதி பற்றாக்குறை இருந்தபோதும் மாணவர்களின் நலன் கருதி பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இது மாணவர்களுக்கான அரசு. சென்னை பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்ற திட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அளிக்கும் சிறந்த சொத்து கல்விதான்.
காமராஜர் ஆட்சிக் காலம் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம், கலைஞர் ஆட்சிக் காலம் கல்லூரிகளின் பொற்காலம் என்பதைப் போல, எனது தலைமையிலான ஆட்சிக் காலம் உயர்கல்வித் துறையின் பொற்காலமாக மாற வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT