Published : 16 May 2016 11:33 AM
Last Updated : 16 May 2016 11:33 AM
புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரியில் காலையில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு 9.30 மணிக்கு பிறகு பரவலான மழையால் மந்தமானது. வாக்களிக்க வந்தோர் வாக்குச்சாவடியிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. பலரும் மழையால் வாக்குச்சாவடிக்கு வர இயலாத சூழலும் ஏற்பட்டது.
ஆட்சியமைப்போம்:
புதுச்சேரியி்ல் இன்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி புஸ்ஸி வீதியிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
அதற்குப் பிறகு நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்புள்ளது. மக்கள் ஆர்வமுடன் ஏராளமானோர் வாக்களிக்கின்றனர். இதன் மூலம் ஆட்சி மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி'' என்று தெரிவித்தார்.
என்.ஆர்.காங்கிரஸ் - காங்கிரஸ் மோதல்:
திருபுவனையிலுள்ள செல்லிப்பட்டு வாக்குச்சாவடியில் என்.ஆர்.காங்கிரஸ்-காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களிடம் இரு கட்சியினரும் ஆதரவு கோரியதால் பிரச்சினை, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர். துணை ராணுவப் படையினர் விரைந்து வந்து கட்சியினரை விரட்டியடித்தனர். அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT