Last Updated : 12 May, 2016 01:10 PM

 

Published : 12 May 2016 01:10 PM
Last Updated : 12 May 2016 01:10 PM

சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு தொகுதிகளில் வேட்பாளர்களை மிரட்டும் பிரச்சினைகள்: தீர்வுக்கு காத்திருக்கும் வாக்காளர்கள்

சேலம் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சேலம் தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு சட்டப்பேரவை தொகுதிகள் முக்கூடல் சங்கமமாய் உள்ளது. இத்தொகுதியில் நிலவும் மக்கள் பிரச்சினைகள் வேட்பாளர்களுக்கு பெரும் சவாலாய் அமைந்துள்ளன.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தொண்டர்கள் புடை சூழ கடும் வெயிலில் தொகுதிக்குள் வீதி, வீதியாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதியில் கூர்ந்து பார்க்க கூடிய 3 தொகுதிகளாக சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகியவை உள்ளன.

சேலம் மாவட்டம் முழுவதும் 27,98,381 வாக்காளர்கள் இருந்தாலும், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இந்த 3 தொகுதிகளில் 8,00,212 வாக்காளர்கள் உள்ளனர். பிற தொகுதிகள் கிராமம் சார்ந்த பகுதிகளாக உள்ளன. அந்த தொகுதிகளில் உள்ள பிரச்சினைகளை விட இந்த 3 தொகுதிகளில் மக்கள் பிரச்சினைகள் ஏராளம். இங்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இப்பிரச்சினைகள் பெரும் சவாலாக அமைந்துள்ளன.

சேலம் தெற்கு தொகுதியில் 2,63,172 வாக்காளர்களும், வடக்கு தொகுதியில் 2,65,925 வாக்காளர்களும், மேற்கு தொகுதியில் 2,71,115 வாக்காளர்களும் உள்ளனர். தெற்கு தொகுதியில் எருமாபாளையம் குப்பைமேடு பிரச்சினை பல ஆண்டாய் மக்களின் பொது சுகாதாரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

வடக்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டிச்சாவடியில் குப்பையில் இருந்து மக்கும், மக்கா குப்பை பிரிப்பு மற்றும் உரம் தயாரிப்பு பணிக்காக திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டம் முடக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு தொகுதிக்குமான பிரச்சினையாக அது அல்லாமல், மாநகரம் முழுவதும் உள்ள மக்கள் பிரச்சினையாக உள்ளது.

சேலம் தெற்கு தொகுதியில் களரம்பட்டி, கருங்கல்பட்டி பகுதியில் ஏராளமான சாய ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து முறையாக சுத்திரிகரிப்பு செய்யாமல் நேரடியாக சாக்கடை கால்வாயில் கழிவுகள் கலப்பதால், நிலத்தடி நீர் மாசடைந்து, மக்களின் குடிநீர் ஆதாரத்தை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளன.

வடக்கு மற்றும் தெற்கு தொகுதியையும் பிரிக்க கூடிய திருமணிமுத்தாறு அபிவிருத்தி திட்டம் முழுமை அடையாமல், சாக்கடை கால்வாயாய் மாறியுள்ளது. தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று தொகுதியிலும் பாதாள சாக்கடை கால்வாய் திட்டம் நிறைவேற்றாததால், குண்டும் குழியுமான சாலை களால் மூன்று தொகுதி மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

அதேபோல, சேலம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் மட்டும் உள்ளதால், மூன்று தொகுதிக்குள்ளும் வாகனப் போக்குவரத்து இடையூறு என்பது மக்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகிறது. இந்த மூன்று தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் டெர்மினல் பேருந்து நிலையம் அமைத்து கொடுப்பதாக, தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்குறுதியாக மாறி வருவது வாடிக்கையாக உள்ளது.

கைத்தறி, நெசவுத்தொழில் நிறைந்த இத்தொகுதியில் ‘டெக்ஸ்டைல் பார்க்’ கனவும்; தேர்தல் மூலம் நனவாகும் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களின் எதிர்பார்ப்புடன் முடிந்துவிடுகிறது.

சேலம் அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பெயரளவில் மட்டுமே இயங்குவதால், 3 தொகுதியை சேர்ந்த நோயாளிகள் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படும் நிலையே தொடர்கிறது.

இப்பிரச்சினைகள் அனைத்தும் தற்போது 3 தொகுதிகளிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு இப்பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக கூறும் வேட்பாளர்கள் குறித்து கவனித்து வரும் வாக்காளர்கள் தேர்தல் வெற்றிக்கு பின்னர் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வரும் 16-ம் தேதி வாக்குப்பதிவுக்கு தயாராகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x