Published : 15 May 2022 04:27 PM
Last Updated : 15 May 2022 04:27 PM
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காப்புக்காடு பகுதியில் கண்காணிப்புக் கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானதைத் தொடர்ந்து வனத்தை ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகத்தில் காப்புக் காடு பகுதியில் சில இடங்களில் வனத்துறை மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பது, வனத்துக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக வனத்துறையினர் இவ்வாறு கேமராக்களை நிறுவி கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில், பாலக்கோடு காப்புக்காட்டில் ஓரிடத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் 2 தினங்களுக்கு முன்பு இரவில் சிறுத்தை ஒன்று நடமாடும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்த சிறுத்தை நடமாட்ட பதிவைத் தொடர்ந்து பாலக்கோடு வனச்சரகத்தில் உள்ள வனத்தை ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். விளைநிலங்களிலும், வனத்தை ஒட்டிய பகுதிகளிலும் பகலில் பொதுமக்கள் மிகக் கவனமாக நடமாட வேண்டும், தனியாக செல்வதை தவிர்த்து குழுவாக செல்வதை பின்பற்ற வேண்டும், இரவில் அவசியம் இல்லாமல் வெளியில் நடமாட வேண்டாம், அவ்வாறு வெளியில் வரும் அவசியம் ஏற்பட்டால் பாத்திரங்கள், தகர டப்பாக்கள் போன்றவற்றின் மூலம் பலத்த ஓசையை எழுப்பிவிட்டு வெளியில் நடமாடும்போது சிறுத்தை இடம்பெயர்ந்து சென்றுவிட வாய்ப்புள்ளது.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும், நாய் உள்ளிட்ட வீட்டு விலங்குகளையும் பாதுகாப்பான இடங்களில் பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை பாலக்கோடு வனச் சரகர் நடராஜன் தலைமையிலான வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சிறுத்தை வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் அல்லது கிராமங்களுக்குள் நுழைந்து விடாத வகையிலும் வனத்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, பாலக்கோடு வனச் சரகரத்தில் இருந்து அடுத்தடுத்து உள்ள வனச் சரகங்களுக்கு இடம்பெயர்ந்து அங்குள்ள கிராமங்களுக்குள் சிறுத்தை நுழைந்து விடவும் வாய்ப்புள்ளதால் இதர வனச்சரக பகுதியின் வனத்தை ஒட்டிய கிராமங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT