Last Updated : 15 May, 2022 04:26 PM

4  

Published : 15 May 2022 04:26 PM
Last Updated : 15 May 2022 04:26 PM

அதிமுகவை மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக  உருவாக்கிட தகுந்த நேரம் வந்துவிட்டது: வி.கே.சசிகலா பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண விழாவில் பேசும் வி.கே.சசிகலா | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: அதிமுகவை காப்பாற்றிடவும், மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்கிடவும் தகுந்த நேரம் வந்துவிட்டது என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று (மே 15) நடைபெற்ற சசிகலாவின் ஆதரவாளர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டு வி.கே.சசிகலா பேசியது: அதிமுக கட்சி ஒன்றுபட வேண்டும், வென்று காட்ட வேண்டும். அதிமுக உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விடமுடியாது. இந்த இயக்கம் எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் கடந்து வந்துள்ளது.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதே சோதனையான காலம்தான், ஜெயலிலதா மறைவுக்கு பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளது. அன்றைக்கு எப்படி கட்சி மீண்டெழுந்ததோ, அதே போல தற்போதும் புதுப்பொலிவு பெறும். இந்க கட்சி உன்னத நிலையை அடையும் வரை நான் ஓயமாட்டேன். தமிழக மக்கள் மறைந்த முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் வராதா? என எதிர்பார்த்திருக்கும் சூழலில், விரைவில் அதனை நிறைவேற்றி காட்டுவேன். அதிமுகவை காப்பாற்றிடவும், மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்கிடவும் தகுந்த நேரம் வந்துவிட்டது.அனைவரையும் ஒருங்கினைத்து, ஒரே இயக்கமாக உருவாக்க பயணித்து வரும் சூழலில், தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க பொறுமையோடு எதிர்கொண்டால் வெற்றியை காணமுடியும்.

சசிகலா சொன்ன குட்டி கதை: நான் ஒரு குட்டி கதையை சொல்கிறேன், "குரங்கு ஒன்று மாங்கொட்டையை ஊன்றி, மரமாக வளரச்செய்தால், நம் இஷ்டத்துக்கு மாம்பழங்களை சாப்பிடலாம் என, மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீரூற்றியது. சிறிது காலம் ஆகியும் செடி வளரவில்லை. குரங்குக்கோ அவரசம். அந்த அவசர புத்திக்கொண்ட குரங்கு, மண்ணில் புதைத்து வைத்து இருந்த மாங்கொட்யை எடுத்து பார்ப்பது, மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது. மாங்கொட்டை பத்திரமாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால், மாங்கொட்டையை எடுத்து, எடுத்து பார்த்தால் செடியாக முளைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையை தூர எரிந்து விட்டு வருத்தப்பட்டது.

அதாவது குரங்கின் ஆசை நியாயமானது என்றாலும், அதன் அவசரபுத்தி நியாயமானதல்ல. காலம் என்ற நியதி இல்லாமல், எந்தச் செயலும் நிறைவேறுவதில்லை. எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால், விதையை விதைத்து நீருற்றி சில காலம் பொறுமை காக்க வேண்டும். அதுபோல நம் செயல்கள் இருக்க வேண்டும். சோதனைகளில் நமக்கு கிடைத்த அனுபவத்தை நாம் நிச்சயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சில விசயங்களை நாம் மறந்து விட வேண்டும். அப்படி செயல்பட்டால் அதிமுக வலிமை பெரும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x