Published : 15 May 2022 04:00 AM
Last Updated : 15 May 2022 04:00 AM
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன.
சென்னையில் 1998-க்குப் பிறகும், இதர நகர்ப்புற உள்ளாட்சிகளில் 2008-ம் ஆண்டுக்குப் பிறகும் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. 2013, 2019-ல் வரி உயர்வு அறிவிக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரையிலான சொத்து வரி உயர்வை கடந்த மார்ச் 31-ல்அறிவித்தது. 600 சதுரஅடி பரப்பளவு வரை, 601 முதல் 1,200 சதுரஅடி வரை, 1,201 முதல் 1,800 சதுரஅடி வரை, 1,800 சதுர அடிக்கு மேல் என 4 வகையாகப் பிரித்து சொத்து வரி மதிப்பிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளும எதிர்ப்புத் தெரிவித்தன. வரி உயர்வு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கட்சிகள் தெரிவித்தன. மேலும், எதிர்க் கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சிகள் சார்பில், சொத்து வரி உயர்வு தொடர்பாக ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கடந்த ஏப்ரல்மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சென்னையில் ஆட்சேபம் தெரிவிப்பதற்கான அவகாசம் முடிந்தது. மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ள நிலையில், சுமார் 30 பேர் மட்டுமேஆட்சேபனை மனுக்களை அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2 மனுக்கள் மட்டுமே வந்துள்ளன. ஆவடி மாநகராட்சியில் யாரும் மனு அளிக்கவில்லை. இதர நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் இதேநிலைதான் நீடிப்பதாகத் தெரிகிறது.
ஜெயக்குமார் கருத்து
சொத்துவரி உயர்வு மக்களை பாதிப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மக்களிடம் இருந்து ஆட்சேபனை மனுக்கள் வராதது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “ஆட்சேபனை மனுக்கள் குறைவாக வந்திருக்கலாம். ஆனால், மக்களிடம் கடும் எதிர்ப்பு உள்ளது. அதை 2024 மக்களவைத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்” என்றார்.
பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறியபோது, “மக்கள் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்காவிட்டாலும், சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தியதால் கடும் வேதனையில் உள்ளனர்” என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம், “சொத்து வரியை உயர்த்தாமல் உள்ளாட்சிகளால் செயல்பட முடியாது. பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சிகள் சொத்து வரியை உயர்த்துவது வழக்கமானதுதான் என்று மக்கள் கருதி இருக்கலாம். அதனால் ஆட்சேபனைகளை தெரிவித்திருக்க மாட்டார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT