Published : 15 Jun 2014 01:17 PM
Last Updated : 15 Jun 2014 01:17 PM
மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக் கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா பேசியதாவது: சாட்சிகளை மிரட்டு வதும், விசாரணையை தாமதப்படுத் தும் போக்கும் வளர்ந்துள்ளன. நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடு களை தடுத்தாக வேண்டும். மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்வதும், நேர்மையான விசாரணையை உறுதி செய்வதும் மிகவும் அவசியமாக உள்ளன. அதேநேரத்தில் நேர்மையான விசாரணை எனக் கூறிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கோ, குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கோ போதிய வாய்ப்பு கிடைக்காமல் செய்து விடக் கூடாது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதாட வழக்கறிஞர்கள் இல்லாத சூழலில், சட்ட உதவி மையம் மூலமாக அவர்களுக்கான வழக்கறிஞர்களை நியமித்திடவும், அவர்கள் தரப்பு கருத்துகளையும் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறிடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
நீதியை வழங்கும் நீதிபதிகள் சட்டத் தின்படி செயல்படும்போது, நீதிபதி களின் பணியானது தெய்வீகமாகக் கருதப்படுகிறது என்றார் நீதிபதி மிஸ்ரா. சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி பேசும்போது, வழக்குகளுக்கு விரைவாக முடிவு காண வேண்டும் என்ற உத்வேகத்துடன், நீதிபதிகள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி பணியாற்றிட வேண்டும் என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஜி.எம்.அக்பர் அலி, மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பயிற்சி அரங்கில் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியின்போது, மூத்த குடிமக்களுக்காக தனியாக ஒரு சட்ட உதவி மையத்தைத் தொடங்கி வைத்த நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சிறப்பு செய்தி மடலையும் வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT