Published : 15 May 2022 04:00 AM
Last Updated : 15 May 2022 04:00 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய போலீஸார் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலமான தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இதமான தட்பவெப்பம் நிலவி வருகிறது. சாரல் மழையால் அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் 41.75 அடி, பெருஞ்சாணி அணையில் 41.65 அடி,பொய்கையில் 18.10, மாம்பழத்துறையாறில் 18, முக்கடல் அணையில் 4.80, சிற்றாறு ஒன்றில் 9.94, சிற்றாறு இரண்டில் 10.04 அடி தண்ணீர் உள்ளது.
அணைகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் மலையடிவாரங்களில் பெய்து வரும் மழையால் திற்பரப்பு தடுப்பு அணையில் தண்ணீர் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டுகிறது.
விடுமுறை நாளான நேற்று ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் திற்பரப்பில் குவிந்தனர். பிற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் திற்பரப்பில் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அங்குள்ள நீச்சல் குளம், தடுப்பணையில் உள்ள படகு இல்லத்திலும் கூட்டம் அலைமோதியது.
நேற்று அதிகாலையில் இருந்து திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் கூடியதால் பிற மாநிலங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் குலசேகரத்தில் இருந்து திற்பரப்பு வரை அணி வகுத்து நின்றன.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வெகுநேரம் வாகனங்கள் நகர வழியின்றி நின்ற நிலையில், அவற்றை சீரமைக்க போக்குவரத்து போலீஸார் இல்லாததால் வாகன ஓட்டிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே, திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் வரும் நேரத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்களை பணி அமர்த்த வேண்டும் எனவும் சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
இதுபோல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரிகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை உட்பட பிற சுற்றுலா மையங்களிலும் நேற்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment