Published : 14 May 2022 05:20 PM
Last Updated : 14 May 2022 05:20 PM
சென்னை: நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முதற்கட்டமாக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு அதன் செயல்பாட்டினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, போக்குவரத்துத் துறையில் 136 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போக்குவரத்துத் துறை சார்பில் பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 2500 மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணியின் முதற்கட்டமாக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் (Panic Button) பொருத்தப்பட்டு அதன் முன்னோட்ட செயல்பாட்டினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த முன்னோட்ட வெளியீட்டின் (Beta) நோக்கம், நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதும், காவல் துறை மற்றும் மருத்துவ அவசர ஊர்தியின் (Ambulance) கட்டளை மையத்துடன் நேரடி தொடர்பு கொள்வதாகும். இதற்காக, ஒவ்வொரு பேருந்திலும் மூன்று கேமராக்கள், நான்கு அவசர அழைப்பு பொத்தான்கள் (Panic Button) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (MNVR) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (MNVR) 4G GSM SIM வழியாக கிளவுட் (Cloud) அடிப்படையிலான கட்டளை மைய பயன்பாட்டுடன் இணைக்கப்படும்.
இம்முழு அமைப்பும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை (Integrated Command and Control Centre) வழியாக கண்காணிக்கப்படும். இதன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கான தகவல் மையம் (Data Center) கிளவுட் (Cloud) உடன் இணையும்.
பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் அசௌகரியங்களின் போதும், பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போதும், அவசர அழைப்பு பொத்தான்களை (Panic Button) அழுத்தி, அந்நிகழ்வுகளை பதிவு செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம், கட்டளை மையத்தில், பேருந்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவின் சில வினாடி முன் தொகுப்புடன் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கும். இந்த ஒலி தூண்டுதலை கொண்டு, செயலியை இயக்குபவர் (Operator) நிலைமையைக் கண்காணித்து, நிகழ்நேர அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆவன செய்வார். இதற்காக கட்டளை மையம், காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் அவசரகால பதில் மையத்துடன் இணைக்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாட்டின் போது, நிகழ் நேர அவசர அழைப்புகள் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 31 பணிமனைகள் மற்றும் 35 பேருந்து முனையங்கள் முழுவதும் மைய கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையிலான வீடியோ பகுப்பாய்வு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகள் என அறியப்பட்டவர்களை அடையாளம் காணவும் முடியும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் போக்குவரத்துத் துறை, காவல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் பல வகையான பயன்பாடுகளுக்கு பேருதவியாக இருக்கும்.
136 பணி நியமன ஆணை: மேலும், அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் (மாநகர் போக்குவரத்துக் கழகம் நீங்கலாக) மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் பணியாற்றி, பணியின் போது உயிரிழந்த 136 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், 5 ஓட்டுநருடன் கூடிய நடத்துனர், 21 ஓட்டுநர்கள், 106 நடத்துனர்கள், தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் 4 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு தமிழக முதல்வர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கே. கோபால், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...