Published : 14 May 2022 04:09 PM
Last Updated : 14 May 2022 04:09 PM
திருப்பூர்: தக்காளி விலை உயர்வால் தங்களுக்கு பயனில்லை என தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்த நிலையில், தக்காளி விலையும் உயா்ந்தது. விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்கப்பட்டது. பின்னா் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வரத்து குறைவால் தக்காளி விலை கிடுகிடுவென, கடந்த சில நாட்களாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை 28 கிலோ கொண்ட ஒரு தக்காளி டிப்பர் ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 மடங்கு உயர்ந்து, ரூ. 1600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தை தக்காளி விவசாயிகள் கூறியதாவது: சந்தையில் நாள்தோறும் 25 டன் முதல் 30 டன் வரை தக்காளியானது இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஆனால் தற்போது வரத்து குறைவால் கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்யவேண்டிய சூழல் நிலவி வருகிறது. கடந்த மாதம் ரூ. 300-க்கு விற்பனை செய்த 28 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர், தற்போது 5 மடங்கு விலை உயர்ந்து ரூ. 1600-க்கும், 15 கிலோ எடை கொண்ட டிப்பர் ரூ. 800 வரை விற்பனையாகிறது. விலைகுறைந்த சமயங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தக்காளியை வாங்கி சென்றனர். தற்போது விலையேற்றத்தின் காரணமாக, சில்லரை வியாபாரிகள் கூட ஒரு டிப்பர் மட்டுமே வாங்கி செல்கின்றனர் என்றனர்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சமீபத்தில்தான் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது இதனால் அடுத்த சில மாதங்களுக்கு வெளிமாநில தக்காளியை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய சூழல், தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றும், விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் மட்டுமே இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், தாளாவாடி, மாநில எல்லையான ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் தக்காளி தான் தற்போது சந்தைக்கு வருகின்றன. அவர்களது கொடி தக்காளி என்பதால், சேதாரம் அதிகளவில் இருக்காது. தற்போது தமிழகத்தில் தக்காளி விலை உயர்வால் தமிழக விவசாயிகளுக்கு பலன் இல்லை. கர்நாடக மாநில விவசாயிகளுக்கு லாபம் கிட்டும். ஏற்கனவே தமிழக விவசாயிகள் பலரும் போதிய விலை இல்லாததால், தக்காளியை அழித்துவிட்டனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...