Published : 14 May 2022 04:00 AM
Last Updated : 14 May 2022 04:00 AM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் மாற்றியமைக்கப்படாத மின் கம்பிகள்: அறிவிக்கப்பட்ட புதைவட திட்டம் என்ன ஆனது?

மதுரை

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு மதுரை தேர்வானபோது, உலகத்தரம் வாய்ந்த அனைத்து கட்டமைப்பு வசதிகள், கம்பியில்லாத தடை யற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர், பளபளக்கும் சாலைகள், பார்க்கிங் வசதிகள் என பல்வேறு வசதிகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனால் இத் திட்டம் குறித்து மதுரை மாநகர மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதற்காக மதுரை மாநகராட் சியில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை தேர்வு செய்து ரூ.995.55 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் 14 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் முக் கியமானது மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மின் கம்பம், மின் வயர்கள் இல்லாத “ஸ்மார்ட் சாலைகளாக” அமைக்கப்படும் என்ற திட்டம் ஆகும்.

அதனடிப்படையில் தற்போது சித்திரை வீதியில் கருங்கல் சாலையும், ஆவணி வீதிகளில் பேவர் பிளாக் சாலையும், மாசி வீதிகளில் கான்கிரீட் சாலையும் அமைக்கப்பட்டன. இந்த சாலை களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் திட்டமிட்டபடி தொலைத்தொடர்பு கேபிள்கள், மின்சார கேபிள்கள் ஆகியவற்றுக்காக பூமிக்கு அடியில் தனித்தனி கம்பார்ட்மெண்ட்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆவணி வீதிகளில் மட்டும் இன்னும் இப்பணி முடியவில்லை. மற்ற சாலைகளில் கேபிள்களுக்கான தனிப்பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டும், தற்போது வரை மின்சார மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்கள் சாலைகளின் மேலே திறந்தவெளியில் குறுக்கும், நெடுக்குமாக தொங்கிக் கொண்டி ருக்கின்றன.

திறந்தவெளியில் செல்லும் மின்சார கம்பிகளால் நகர சாலை களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது தினசரி சுவாமி ஊர்வலம் மாசி வீதிகளில் நடைபெறும். முக்கியமாக தேரோட்டத்தின்போது கடந்த காலங்களில் இப்பகுதியில் மின் தடை செய்யப்படுவதும், குறுக்கே செல்லும் வயர்களை தற் காலிகமாக துண்டித்து, தேரோட்டம் நிறைவடைந்த பிறகு மறு இணைப்பு கொடுப்பதும் வழக்கம். ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி மின்சார கேபிள்களை பூமிக்கடியில் புதைத்திருந்தால் இதுபோன்ற இடையூறுகளும், விபத்து அபாயமும் தவிர்க்கப்படும். தவிர மின் கம்பிகளுக்காக மரங்கள் வெட்டப்படும் சூழலும் ஏற்படாது. அடுத்த சித்திரைத் திருவிழாவுக்கு முன்பாவது இப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகளிடம் கேட்டபோது, மின்சார கேபிள்களை பூமிக்கடியில் கொண்டு செல்வதற்கான வசதி களை ஏற்படுத்திக் கொடுத்து விட்டோம்.

இனி மின்வாரியம்தான் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவர்கள் பணிகளை விரைவில் தொடங்க உள்ளனர். அதனால், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கூறியபடி மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் ஸ்மார்ட் சாலைகளாக மாறும். அந்த திட்டமிடுதலுடன்தான் இந்த சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் வெளி வீதிகளுமே இதேபோன்று ஸ்மார்ட் சாலை களாக மாற்றப்படும். என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x