Published : 13 May 2022 06:20 PM
Last Updated : 13 May 2022 06:20 PM
மதுரை: நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வி.செல்வி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் 4 வார்டுகளில் நான் உட்பட அதிமுக சார்பில் போட்டியிட்ட 4 பேர் தேர்வு செய்யப்பட்டோம். ஒரு வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டவர் வெற்றிப் பெற்றார். பின்னர் நான் ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். சுயேட்சை கவுன்சிலர் திமுகவில் சேர்ந்துள்ளார். அவரது தூண்டுதலின் பேரில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எனக்கு எதிராக அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு விளக்கம் கேட்டு திருச்செந்தூர் கோட்டாட்சியர் 6.5.2022ல் நோ்ட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் ராமலெட்சுமி, செல்வம் ஆகியோர் மனு அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சி விதிப்படி மொத்தமுள்ள 5 கவுன்சிலர்களில் 3 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு புகார் கொடுத்தால் மட்டுமே நம்பிக்கையில்லா நோட்டீஸ் கொடுக்க முடியும்.
அவ்வாறு இல்லாமல் 2 கவுன்சிலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம். எனவே கோட்டாட்சியர் அனுப்பியுள்ள நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். அந்த நோட்டீஸ் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராஜாகார்த்திகேயன் வாதிட்டார். பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...