Published : 13 May 2022 04:09 PM
Last Updated : 13 May 2022 04:09 PM
சென்னை: கூடுதல் பாமாயில் வழங்க உணவுப் பொருட்கள் சப்ளை நிறுவனங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெண்டர் கோரியிருந்தது.ஒரு லிட்டர் 120 ரூபாய் 25 காசுகள் என்ற விலையில் பாமாயில் சப்ளை செய்த நிலையில், மே 3-ம் தேதிக்குள் கூடுதல் பாமாயில் சப்ளை செய்யும்படி உணவு பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு பாமாயில் சப்ளை செய்யும் சென்னையை சேர்ந்த ஸ்டார் ஷைன் லாஜிஸ்டிக்ஸ், ருச்சி சோயா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் நிறுவனங்கள் தரப்பில், சூரியகாந்தி எண்ணெய் அதிகளவில் சப்ளை செய்யக்கூடிய நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடப்பதால், அதன் சப்ளை முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. பாமாயிலின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலையும் அதிகரித்துள்ளது. மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலின் விலை பிப்ரவரி மாதம் ஒரு மெட்ரிக் டன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 290 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் மாதம் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 320 ரூபாயாக்கு விற்பனையானது. ஆனால் பழைய விலைக்கே கூடுதலாக பாமாயில் சப்ளை செய்ய வேண்டுமென நுகர்பொருள் வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் பாமாயில் சப்ளை செய்யாவிட்டால் தங்கள் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்து, அரசு டெண்டர்களில் பங்கேற்க விடாமல் செய்யக் கூடும் என்பதால், நுகர்பொருள் வாணிப கழகத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டனர்.
அப்போது தமிழ்க அரசு தரப்பில், உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் உள்நாட்டில் மட்டுமே நடக்கிறது. கடல் மார்க்கமான வணிகத்திற்கு எவ்வித இடையூறும் இல்லை. பாமாயிலை மலேசியா மற்றும் இந்தோனேசியா மட்டுமல்லாமல் பிற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்ய முடியும். கூடுதல் அளவு பாமாயில் பாக்கெட்களை வழங்க வேண்டுமென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உத்தரவில் எவ்வித தவறும் இல்லை என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுவாமிநாதன், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT