Published : 13 May 2022 02:53 PM
Last Updated : 13 May 2022 02:53 PM
சென்னை: கட்டண உயர்வுக்கு பதிலாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இது மக்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும். இது தேவையற்றது; தவிர்க்கப்பட வேண்டும்.
பேருந்து கட்டணம் மிக, மிக குறைந்த அளவில் உயர்த்தப்பட்டால் கூட அது மக்களை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழலில் மக்களை பாதிக்காத பேருந்து கட்டண உயர்வு என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பதன் பொருளை புரிந்து கொள்ள முடியவில்லை!
பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று கடந்த வாரம் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த வாரம் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நேரு கூறுகிறார். ஏன் இந்த குழப்பம்?
வரலாறு காணாத பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த நேரத்தில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதை மக்களால் தாங்க முடியாது. கட்டண உயர்வுக்கு பதிலாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்து கழகங்களை லாபத்தில்
இயக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT