Published : 13 May 2022 12:05 PM
Last Updated : 13 May 2022 12:05 PM

மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 13) திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கத்தில், 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்வர் ஏற்கனவே வேளச்சேரி மற்றும் கோயம்பேடு மேம்பாலங்களை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.146.41 கோடி மதிப்பீட்டில், மேடவாக்கத்தில் மறைமலையடிகள் பாலம் - இரும்புலியூர் சாலையில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட் - மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி இரண்டு தனித்தனி மேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 3 வழித்தட மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் வேளச்சேரி - தாம்பரம் தடத்தில், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்புகளை இணைத்து 1.06 கி.மீ. நீளத்தில் மேம்பாலப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, தாம்பரம் - வேளச்சேரி தடத்தில், மவுண்ட் மேடவாக்கம் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்புகளை இணைத்து 2.03 கி.மீ. நீளத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும். மேலும், தாம்பரம், வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, தரமணி, அடையாறு, மேடவாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கும் இப்பாலம் பயனுள்ளதாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில்,பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் பி.ஆர்.குமார், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) பெருநகரம் ரெ.கோதண்டராமன், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு இரா.சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x