Published : 13 May 2022 09:19 AM
Last Updated : 13 May 2022 09:19 AM
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் பொது சுகாதாரத்துறையின் கரோனா ஆய்வகத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறைக்கு சொந்தமான மாநில பொது சுகாதார ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தில் கரோனா சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்படுகிறது. இந்த ஆய்வகத்தில் தினசரி 7,000 முதல் 8,000 கரோனா சோதனைகள் செய்ய முடியும். தற்போது வரை இந்த ஆய்வகத்தில் 26.57 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் மற்றும் அதன் தன்மை குறித்து முழு மரபணு பகுப்பாய்வு மற்றும் உருமாறிய கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் வகையில் இந்த ஆய்வுகத்தில் அமைக்கப்பட்ட மரபணு பகுப்பாய்வு மையத்தை கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில் இந்த ஆய்வகத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ்நாட்டில் ஐஎஸ்ஓ 15189:2021 தரச்சான்று பெற்ற முதல் ஆய்வகம் என்ற பெருமை இந்த ஆய்வகத்திற்கு கிடைத்துள்ளது.
ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள், தரமான கருவிகள், சரியான மாதிரி சேகரிப்பு மற்றும் சோதனை செய்யும் முறை, துல்லியமான ஆய்வு அறிக்கை உள்ளிட்ட தரநிலைகள் ஆய்வு செய்யப்பட்டு இந்த தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment