Published : 21 May 2016 04:26 PM
Last Updated : 21 May 2016 04:26 PM
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் தொகுதியை 39 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு திமுக கைப்பற்றியுள்ளது.
திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நத்தம் தொகுதி. நத்தம் மட்டும் பேரூராட்சியாக இருந்தபோதும், தொகுதி முழுவதும் கிராமப்புறங்களே நிறைந்ததொகுதி. மலை கிராமங்களும் உண்டு. 1977-ம் ஆண்டு மதுரை மேலூர் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உதயமானது. தொகுதி உதயமானது முதல் தொடர்ந்து ஆறு முறை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்றவர் எம்.ஆண்டிஅம்பலம். தற்போது வெற்றிபெற்றவரின் தந்தை. 1989 தேர்தலில ஆண்டி அம்பலம், காங்கிரஸ் சார்பில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது அதிமுக (ஜெ) பிரிவில் போட்டியிட்டவர் அமைச்சராக இருந்த ஆர். விசுவநாதன். எனது மறைவிற்கு பிறகு தான், இந்த தொகுதி அடுத்தவர் கைக்கு செல்லும் என மக்கள் மீதான நம்பிக்கையில் சொன்னவர் மறைந்த ஆண்டிஅம்பலம்.
நத்தத்தில் பலமுறை போட்டியிட்டும் வெற்றிபெற முடியாத திமுகவினர் ‘நாடே திருந்தினாலும் நத்தம் திருந்தாது’ என சுவர்களில் எழுதி வைத்த சம்பவம் நடந்ததுண்டு. முடிந்தவரை கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்குவது இல்லாவிட்டால் போட்டியிடுவது என்ற நிலையையே திமுக தொடர்ந்து கடைப்பிடித்தது. சரியான வேட்பாளர்கள் திமுகவுக்கு கிடைக்காததும் ஒரு காரணம். இந்நிலையில், ஆண்டிஅம்பலம் மறைந்தபின் நடைபெற்ற இடைத் தேர்தலில் முதன்முறையாக ஆர். விசுவநாதன் வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் விசுவநாதனின் வெற்றி தொடர்ந்தது.
இந்தமுறை தேர்தலில நத்தம் தொகுதி அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் ஆத்தூர் தொகுதிக்கு தேர்தல் பணிக்கு சென்றது இந்த தொகுதியில் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் விசுவநாதன் போட்டியிட்டிருந்தால் பணபுழக்கம் அதிகளவில் இருந்திருக்கும். இங்கு போட்டியிட்ட வேட்பாளரால், அதிக பணம் செலவு செய்ய முடியாததும் ஒரு காரணமாக அமைந்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட திமுகவினர், வேட்பாளரின் சமுதாய வாக்குகளை ஒன்று சேர்ப்பதில் தீவிரம் காட்டினர். திமுக கட்சி ஓட்டுடன் வேட்பாளரின் சமுதாய வாக்குகளும் கைகொடுக்க மறைந்த எம்எல்ஏ எம்.ஆண்டிஅம்பலத்தின் மகன் எம்,ஏ ஆண்டிஅம்பலம் வெற்றிபெற்றார். 39 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு நத்தம் தொகுதியை திமுக கைப்பற்றியது பெரிய சாதனை என அக்கட்சியினர் கூறிவருகின்றனர்.
இதுகுறித்து இ.பெரியசாமி கூறுகையில், நத்தத்தில் சூரியன் உதிக்கச் செய்துவிட்டோம். இனி இந்த வெற்றி தொடரும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT