Published : 12 May 2022 06:42 PM
Last Updated : 12 May 2022 06:42 PM

அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச் சிறப்பாக நடத்த முதல்வர் உத்தரவு: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பாக நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில், 126 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 71 நபர்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "சில இடங்களில் சொத்து வரி கட்டாமல் உள்ளனர். அனைவருக்கும் ஒரே மாதிரியான வரியை வசூலிக்கவும், முறையற்ற நிர்வாகத்தை, முறைப்படுத்தவுமே தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

10 - 15 வருடங்களுக்கு ஒருமுறை வரி உயர்த்துவது சரியாக இருக்காது என்பதால் ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்கள் தீட்டவும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதித் தேவையை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காகவும், அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சொத்து வரி குறைவாக உள்ளது.

அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால், அதை சிறப்பாக நடத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகப் பணியாளர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை. அம்மா உணவகங்களில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினால், அது நிவர்த்தி செய்யப்படும்" என்றார்.

மேலும் விடியா அரசு என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சனத்திற்கு பதில் அளித்தால் அது வேற மாதிரி ஆகிவிடும் என சிரித்துக்கொண்டே பதிலளிக்காமல் எழுந்துசென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x