Published : 12 May 2022 01:12 PM
Last Updated : 12 May 2022 01:12 PM

தமிழகத்தின் மொத்த அரிசி உற்பத்தியில் காவிரி டெல்டா பங்கு 34% - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மாநிலத்தின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் 34 சதவீதம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா பகுதி அளித்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் இன்று (மே 12) நடைபெற்றது. வேளாண் மண்டல விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து முதல்வர் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக, நீர்வளத்துறை, வேளாண்துறை, தொழில்துறை உள்ளிட்ட 11 துறையின் அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: " காவிரி டெல்டா என்பது மிகவும் செழிப்பான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் முழு பகுதியையும், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில பகுதிகளையும் உள்ளடக்கியது.

காவிரி நதியின் மூலம் பாசனம் கிடைக்கப்பெறுவதால், இப்பகுதிகளில் நெல் ஒரு முக்கியமான பயிராக கிட்டத்தட்ட 14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, மாநிலத்தின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் 34 சதவீதம் இந்த காவிரி டெல்டா பகுதி அளித்து வருகிறது.

தென்னை, கரும்பு, வாழை, மக்காச்சோளம், பயிர் வகைகள் எள், பருத்தி போன்ற பயிர்களும் டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், இந்த பகுதி மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காணப்படுகிறது. இந்த பகுதியைச் சேர்ந்த உழவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் வேளாண் தொழிலைத்தான் பெரிதும் சார்ந்துள்ளனர். வேளாண்மை உணவு உற்பத்தி பகுதியாக இது இருந்தாலும், இன்னொரு பகுதியில் பல நெருக்கடிக்குரிய பகுதியாகவும் இது உள்ளது.

இந்த பகுதிகளில் வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் பெரும் இடர்பாடுகளை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து நமக்கு வரவேண்டிய காவிரி நீரைப் பெறுவதற்கு, அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நீண்ட காலமாக நாம் போராடி வந்துகொண்டிருக்கிறோம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வாழும் உழவர்கள், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பும் , முதல்வரை தலைவராக கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை மட்டும் இயற்றி அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர, எந்தவொரு முன்னெடுப்பையும் முந்தைய அரசு எடுக்கவில்லை. முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருந்தாலும், அது வேளாம் பெருமக்களின் வாழ்வை பாதுகாக்கிற சட்டமாக இருக்கிற காரணத்தால், அச்சட்டத்தின் கூறுகளை எல்லாம் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென்று தமிழக அரசு உறுதியாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x