Last Updated : 12 May, 2022 08:19 AM

1  

Published : 12 May 2022 08:19 AM
Last Updated : 12 May 2022 08:19 AM

டீசலில் இயங்கும் பழைய பேருந்து, லாரிகளை சிஎன்ஜிக்கு மாற்றும் மையம் முதல்முறையாக கோவையில் தொடக்கம்

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக, புதிதாக கார் வாங்குவோரில் கணிசமானோர் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் கார்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். சிலர் தங்கள் பழைய கார்களிலேயே இயற்கை எரிவாயு மூலம் இயங்கக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கேற்ப மாற்றம் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட மையங்களும், ஐஓசிஎல் சார்பில் சிஎன்ஜி நிரப்பும் நிலையங்களும் தமிழகம் முழுவதும் முக்கிய சாலைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன (ஐஓசிஎல்) அதிகாரிகள் கூறியதாவது: பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை, சிஎன்ஜி-ல் இயங்கும் வகையில் மாற்றம் செய்யும் 8 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மையங்கள் கோவையில் உள்ளன. ஆனால், டீசலில் இயங்கும் பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களை மாற்றம் செய்யும் மையம் தமிழகத்தில் எங்கும் இல்லை. இந்நிலையில், முதல்முறையாக கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில், டீசல் கனரக வாகனங்களை சிஎன்ஜி வாகனமாக மாற்றம் செய்யும் மையம்தனியார் டீலர் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் செலவு மிச்சம்

சிஎன்ஜி பயன்படுத்தி வாகனங்களை இயக்கும்போது எரிபொருள் செலவு சுமார் 30 சதவீதம் வரை மிச்சமாகும். மேலும், அந்த வாகனங்களை பராமரிக்கும் செலவும்குறைவாகும். தினசரி போக்குவரத்துக்கு அதிகம் பயன்படும் லாரி, பேருந்து, கால் டாக்ஸி போன்றவை சிஎன்ஜி-ல் இயங்கும்போது சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பிருக்காது.

கோவையில் தற்போது கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பாப்பம்பட்டி, சோமனூர், சிங்காநல்லூர், காளப்பட்டி, காந்திமாநகர், கே.என்.ஜி.புதூர், மேட்டுப்பாளையம், கோவில்பாளையம் ஆகிய 10 இடங்களில் சிஎன்ஜி நிரப்பும் நிலையங்கள் உள்ளன. இங்கு மட்டும் தற்போது ஒரு நாளைக்கு 2.50 டன் சிஎன்ஜி விற்பனையாகிறது. நடப்பு நிதியாண்டில் கோவையின் முக்கிய சாலைகளில் மேலும் 20 இடங்களில் சிஎன்ஜி நிரப்பும் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

முன்பு கொச்சியிலிருந்து சிஎன்ஜிநிரப்பும் நிலையங்களுக்கு எரிவாயுவை டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர வேண்டியிருந்தது. இந்நிலையில், கோவை மதுக்கரை அருகே உள்ள பிச்சனூரில்அமைக்கப்பட்டு வந்த இயற்கை எரிவாயு விநியோக நிலையம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கொச்சியிலிருந்து குழாய் மூலம் இங்கு கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயு, வரும் நாட்களில் கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. முன்பு டேங்கர் லாரிகள் மூலம் எரிவாயுவை கொண்டுவர வேண்டியிருந்ததால் அதன் கட்டணம் அதிகமாக இருந்தது.

சர்வதேச சந்தையில் தற்போது இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துவரும் சூழலில், ஐஓசிஎல் ஒரு கிலோ இயற்கை எரிவாயுவின் விலையை கோவை வாடிக்கையாளர்களுக்கு ரூ.84-ல் இருந்து ரூ.79 ஆக குறைத்துள்ளது. குழாய் மூலம் நேரடியாக இங்கு எரிவாயு கிடைப்பதே இதற்குக் காரணமாகும். இதனால் சிஎன்ஜி வாகன ஓட்டிகள் கூடுதல் பலன்பெறுவார்கள்.

ஆர்டிஓ பதிவு அவசியம்

கோவையில் மட்டும் சுமார்200-க்கும் மேற்பட்ட பெட்ரோல் வாகனங்கள் சிஎன்ஜி வாகனங்களாக இதுவரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பெட்ரோல், டீசல் வாகனங்களை வடிவ மாற்றம் செய்தபிறகு தொடர்புடைய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) அதுகுறித்து பதிவுசெய்வது அவசியம். இல்லை எனில், காப்பீடு ரத்தாகிவிடும். அந்த வாகனம் ஏதேனும் விபத்தில் சிக்கினால் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிஎன்ஜி பயன்படுத்தி வாகனங்களை இயக்கும்போது எரிபொருள் செலவு சுமார் 30 சதவீதம் வரை மிச்சமாகும். மேலும், அந்த வாகனங்களை பராமரிக்கும் செலவும் குறைவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x