Published : 02 Jun 2014 08:59 AM
Last Updated : 02 Jun 2014 08:59 AM
மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர் ஹவில்தார் மோகன் குமாரின் (40) உடல் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை பகலில் விமானத்தில் கொண்டுவரப்பட்டது.
மே 29ம் தேதி இரவு நடந்த சண்டையில் மோகன்குமார் வீரமரணம் அடைந்ததாக ராணுவத் தரப்பு தெரிவித்தது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் விமானம் மூலம் மோகன் குமாரின் உடல் வந்தது. விமான நிலைய வளாகத்திலேயே மோகன்குமார் உடலுக்கு, அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் சுரேஷ்குமார், கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கோட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் சொந்த ஊரான கோவை மாவட்டம் கோவைப்புதூர் வசந்தம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ரூ.10 லட்சம் காசோலை
வீரமரணம் அடைந்த ராணுவவீரர் மோகன்குமார் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் காசோலையை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மோகன்குமாரின் மனைவி பானுமதியிடம் வழங்கினார்.
மோகன்குமாரின் தந்தை கோவிந்தசாமியும் ராணுவத்தில் இருந்தவர். தாய் ரங்கநாயகி (75). மோகன்குமாருக்கு பானுமதி என்ற மனைவியும், ரித்திக்குமார் என்ற 6 வயது மகனும் உள்ளனர். தவிர சந்திரா, ரேணுகா, சாவித்திரி, மாலா, பிரேமா என ஐந்து மூத்த சகோதரிகளும், செல்வக்குமார், நந்தகுமார் என்ற இரண்டு மூத்த சகோதரர்களும் உள்ளனர்.
முதல்வர் இரங்கல்
தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை எம்.பி. ஏ.பி. நாகராஜ், துணை மேயர் லீலாவதி உண்ணி உள்பட மக்கள் பிரதி நிதிகள் மற்றும் பொதுமக்கள் மோகன்குமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த மோகன்குமாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார்.
மோகன்குமாரின் உடல் ஆத்துப்பாலம் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 45 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
மோகன்குமாரின் மூத்த சகோதரர் செல்வக்குமார் பேசிய போது, “நாட்டுக்கு சேவை செய்யணும் என்று சின்ன வயசுலயிருந்தே சொல்லுவான். இப்ப நாட்டுக்கே தியாகி ஆகிட்டான். தேசத்துக்காக வீரமரணம் அடைஞ்சிருக்காங்கிறதுல எங்க ளுக்கு பெருமையா இருக்கு. தீவிரவாதிகளோட நடந்த சண்டையில இவன் கழுத்துல ஒரு துப்பாக்கி குண்டு துளைச்சு கீழே விழுந்திருக்கான். ரத்தம் வழிய அப்பவும் துப்பாக்கிய விடாம பிடிச்சுட்டு அஞ்சு ரவுண்டு தீவிரவாத கும்பலை சுட்டுட்டுத்தான் உயிரிழந்திருக்கான்னு சக ராணுவ வீரர்கள் அவனைப்பத்தி சொல்லும்போது பெருமையா இருக்கு” என கண்ணீர் மல்க கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT