Published : 11 May 2022 08:38 PM
Last Updated : 11 May 2022 08:38 PM
சென்னை: ஆக்கிரமிப்பு அகற்றம், விதிமீறல் கட்டிடம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்விகளை அடுக்கிய சட்டமன்ற பொது கணக்குக் குழு (Public Accounts Committee), அம்மா உணவகம் குறித்து 1 மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழுவினர் இன்று காலை பெருங்குடி குப்பை கிடங்கு, பெருங்குடி சமுதாய நலக் கூடம், சென்னை நதிகள் சீரமைப்ப அறக்கட்டளை தொடர்பான பணிகள் ஆகிவற்றை நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகள் குறித்து சிஏஜி அளித்த அறிக்கைளின் மீது ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் சென்னை அம்மா உணவகத்தின் செயல்பாடு, வெள்ள தடுப்பு பணிகள், விதிமீறல் கட்டிடங்கள், ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்டவைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொது கணக்குக் குழுவினர் கேள்விகளை அடுக்கினர்.
அம்மா உணவகம் குறித்து அறிக்கை
சென்னையில் அம்மா உணவகங்களை அமைக்கும் போது அந்த பகுதியில் உணவு உட்கொள்பவர்கள் தொடர்பான கணக்கீடு நடத்தப்பட்டதா?, நுகர்பொருள் வாணிப கழகத்திடம் இருந்து மானிய விலையில் தான் அம்மா உணவகத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று அரசாணை இருக்கும் நுகர்பொருள் வாணிப கழகத்திடமிருந்து சந்தை விலையில் பொருட்களை வாங்கியது ஏன் என்று பல கேள்விகள் பொது கணக்குக் குழு சார்பில் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மா உணவகத்தின் செயல்பாடு தொடர்பாக மாநகராட்சி ஆணையர் 1 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று பொது கணக்குக் குழு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆக்கிரமிப்புகள்
சென்னை மாநகராட்சியில் 4,5,8,9 மண்டலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பாக சிஏஜி அறிக்கை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொது கணக்குக் குழுவினர் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
எப்போது நிம்மதியாக வாழ முடியும்?
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து பொது கணக்குக் குழுவினர் பல கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. இது போன்ற தண்ணீர் தேங்கும் நிகழ்வுகள் இல்லாமல் எப்போது மக்கள் நிம்மதியாக வாழ முடியும், இதற்கு என்ன திட்டம் உள்ளது என்று பொது கணக்குக் குழுவினர் கேள்வி எழுப்பினர்.
குப்பை கிடங்கால் நுரையீரல் பிரச்சனை
பொது கணக்குக் குழுவினர் பெருங்குடி குப்பை கிடங்கை பார்வையிட சென்ற போது 70 வயது மூதாட்டி ஒருவர் இந்த குப்பை கிடங்கால் எனக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து மனு அளித்த தகவலை கணக்கு குழுவினர் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் குப்பை கிடங்கு அருகே, சத்தியசாய் நகரில் சாலை அமைக்க வேண்டும், குப்பை எடை மேடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு குழு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை
சென்னையில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் ஏன் நடவடிக்க எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய பொது கணக்குக் குழு, விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.
10 கிரவுண்டு ஆக்கிரமிப்பு
கீழ்ப்பாக்கம், ஈகா திரையரங்கம் பின்புறம், சுப்பிரமணியன் தெருவில் 10 கிரவுண்டு நிலம் தொடர்பாக போலி பத்திரம் தயார் செய்து 10 உணவகங்கள் அங்கு செயல்பட்டுவருவதாக பொது கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொது கணக்குக் குழு அறிவுறுத்தியது.
சிறப்பாக செயல்படும் மருத்துவமனை
இலவச டயாலிசிஸ் வசதியுடன் பெருங்குடியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பொது கணக்குக் குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற மருத்துவமனைகளை மாநகராட்சி முழுவதும் அமைக்க பொது கணக்குக் குழு மாநகராட்சிக்கு பரிந்துரைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT