Published : 11 May 2022 06:53 PM
Last Updated : 11 May 2022 06:53 PM
மதுரை: திருச்சி திருவெறும்பூர் நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்த சவரிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: " திருவெறும்பூர் நத்தமாடிப்பட்டி கிராமத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் திருவிழா நடைபெறும். விழாவில் முக்கியமான தேர்பவனி. 150-வது ஆண்டு திருவிழாவை ஒட்டி புதிய ஆலய திறப்பு மற்றும் தேர் திருவிழா நடத்த அனுமதி கோரி திருவெறும்பூர் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தோம்.
மே 2-ல் ஆலத் திருவிழா நடத்த அனுமதி வழங்கிய போலீஸார், தேர் பவனிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். தஞ்சை களிமேட்டில் சமீபத்தில் நடைபெற்ற சப்பர ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு நடைபெற்றதை சுட்டிக்காட்டி போலீஸார் தேர் பவனிக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
தேர் பவனிக்கு மின்வாரியம், பொதுப்பணித்துறையிடம் முறையாக அனுமதி பெற்று சமர்பித்தால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதை ஏற்க முடியாது. எனவே, நத்தமாடிப்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழாவில் தேர்பவனி நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். பின்னர், மனுதாரர் தரப்பில் மின்வாரியத்திடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று, அந்த அனுமதியை திருவெறும்பூர் காவல் ஆய்வாளரிம் சமர்பிக்க வேண்டும். காவல் ஆய்வாளர் மின்வாரிய அனுமதி அடிப்படையில் தேர்பவனிக்கு அனுமதி வழங்க முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT